புதுடில்லி, அக்.3- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அதை சர்வாதிகார கண்ணோட்டம் கொண்ட வகுப்புவாத அமைப்பாக காந்தியார் அறிவித்ததாக காங்கிரஸ் ஆதாரத்தை வெளியிட்டு தெரிவித்தது.
பிரதமர் புகழாரம்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லியில் நேற்று முன்தினம் (1.10.2025) நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேச கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்களிப்பை புகழ்ந்துரைத்தார்.இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
அத்துடன் தேசத்தந்தை காந்தியார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எவ்வாறு எதிர்த்தார்? என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
காந்தியாரின் உரையாடல்
குறிப்பாக காந்தியடிகளின் நெருங்கிய உதவியாளராக இருந்த பியாரிலால் எழுதிய புத்தகத்தில் இருந்து ஆதாரங்களை வெளியிட்டும், நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ததை சுட்டிக்காட்டியும் குற்றம் சாட்டி இருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
காந்தியார் பற்றிய பியாரிலாலின் புத்தகங்கள் நிலையான குறிப்புப் படைப்புகளாக இருக்கின்றன.
அவரது புத்தகத்தின் 2-ஆவது தொகுதியின் 440-ஆவது பக்கத்தில், காந்தியார் மற்றும் அவரது சகாக்களில் ஒருவருடன் நடந்த உரையாடலை பியாரிலால் குறிப்பிடுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தடை
அதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ‘சர்வாதிகார கண்ணோட்டம் கொண்ட வகுப்புவாத அமைப்பாக’ காந்தியார் விவரிக்கிறார். இந்த உரையாடல் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடந்தது ஆகும்.
(இந்த உரையாடல் அடங்கிய பக்கத்தின் ஒளிப்படத்தையும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ளார்)
5 மாதங்களுக்குப்பிறகு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தார்.
சர்தார் படேல் உரை
பின்னர் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படேல், ஆர்.எஸ்.எஸ்அய். இந்து கலாச்சாரத்தை பாதுகாக்க ரகசியமாக செயல்படும் அமைப்பு எனக் கூறியதுடன், அதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர்பேசும்போது ‘மன்னர்களாலும் ஆட்சியளர்களாலும் மதிக்கப்பட்ட வந்த தேசியக்கொடிக்கும், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட அதிகாரத்துக்கும் ஒரு சவால் இருந்தது. அந்தக் கொடியின் கீழ்தான் காங்கிரஸ் பெரும் தியாகங்களைச் செய்தது, இன்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வாழ்ந்து உழைத்த லட்சியத்தை விட் டுக்கொடுக்க மாட்டார்கள்’ என்றும் தெரிவித்தார்.
இதைப்போல, ‘தேசியக் கொடியை எந்த அமைப்பும் மாற்ற முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா ஒருமதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்’ என்றும் அழுத்தமாக கூறினார்.
ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு கடிதம்
சர்தார் படேலின் இந்த உரை அடுத்த நாள் வெளியான செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்பாடுகளை கடுமையாகக் கண்டித்த சர்தார் படேலின் உரையின் முடிவில் பலத்த கரவொலி எழுப்பப்பட்டதாகஅந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
அந்த செய்தித்தாள் பக்கத்தின் ஒளிப்படத்தையும். அவர் வெளியிட்டு இருந்தார்.
மேலும் பா.ஜனதாவின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தை நிறுவிய ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு படேல் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருந்த ஜெய்ராம் ரமேஷ், அதில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு தெரியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.