காஸா, அக்.2-
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் (செப். 30) நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு பத்திரிகையாளர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் ராணுவத் தரப்பில் இருந்து இந்தத் தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
காஸாவின் மேற்குப் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நீருக்காகத் திரண்டிருந்த பாலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுசைராத் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் (செப். 30) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் யஹ்யா பர்சாக் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.
அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் ஆதரவு
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காஸாவுக்கான அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ளார்.
ஹமாஸ் கிளர்ச்சிப்படை சரணடைய வேண்டும் உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய இந்த அமைதித் திட்டம் குறித்து ஹமாஸ் தலைவர்கள் விரைவில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழப்பு விவரங்கள்
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போரில், இதுவரை 66 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,70,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்
தக்கது.