சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டுக் கட்சிகள் நடத்தாத மாநாடுகளா?
எவ்வளவுக் கட்டுப்பாடு – எத்தகைய பொது ஒழுக்கம்! பெண்களுக்கென்று தனி இடம் என்று ஒதுக்கப்படாத மாநாடு – குடும்பம் குடும்பமாகக் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டும், அழைத்துக் கொண்டும் வரும் மாநாடுகள்.
மாநாட்டுக் கொட்டகையில் குழந்தைகளுக்கு ஏணை கட்டி இருப்பார்களே! பந்தலிலேயே தான் இரவு உறக்கமும் – ஒரு துளி அசம்பாவிதம் உண்டா?
எத்தனை எத்தனை மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் – எவ்வளவுக் கட்டுப்பாடு – எத்தகைய நேர்த்தி!
இவற்றை எல்லாம் கண்டதுதான் தமிழ்நாடு! காந்தியார் படுகொலை செய்யப்பட்டதும் அமைதி காத்த மண் தமிழ் மண்!
வானொலியில் தந்தை பெரியார் பேசினார். கொன்றவர் யார் என்பது முக்கியமல்ல.
எந்த சித்தாந்தம் காந்தியார் படுகொலைக்குக் காரணம் – அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற தந்தை பெரியார் உலவிய ஒழுக்க சீலமான பூமி இது.
தந்தை பெரியார் படத்தை மாட்டி வைத்தால் போதுமா? ‘தந்தை’ பெரியார் பிறந்த நாளில் அவர் படத்திற்கு மாலை சூட்டினால் போதுமா?
யாரை ஏமாற்ற இந்த ‘சித்து’ வேலைகள் எல்லாம்?
ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்காக நடத்த துப்பில்லாத ஆசாமிகள் எல்லாம், அரசியலில் குதித்து, எடுத்தவுடனேயே முதல் அமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டுமாம்! அடேயப்பா எத்தனை பெரிய ஆசை!
சினிமா ரசனை என்பது ரசனையோடு மட்டும் இருக்கட்டும் – அதுவே அரசியலுக்கு மூலதனம் என்பதெல்லாம் – எவ்வளவுப் பெரிய ஏமாற்று வேலை – எத்தகைய கபட நாடகம் – எத்தகைய சித்து வேலை?
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் – அது பற்றிப் பிரச்சினையில்லை.
வருவதற்கு முன் பொது வாழ்க்கையில் அத்தகையோரின் பங்களிப்பு என்ன – செய்த தியாகம் என்ன?
எத்தனை எத்தனை இயற்கைப் பேரிடர்கள், புயல்கள், வெள்ளங்கள் – இவற்றால் எத்தனை உயிர்கள் பலி! வீடிழந்து அடுத்த வேளை உணவுக்கு வக்கின்றிப் பரிதவித்த மக்கள் – இவற்றைப் பற்றி எல்லாம் இந்த நடிகர் கேள்விப்பட்டதுண்டா? கீழே இறங்கி இரக்கம் காட்டியதுண்டா? துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டதுண்டா?
ஒரு பைசா நிதியையாவது கொடுத்ததுண்டா?
மக்கள் அவதிப்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு தத்தளித்துக் கொண்டிருந்த கால கட்டங்களில் எல்லாம் சினிமா ஷுட்டிங்கில் நேரம் தவறாமல் பங்கேற்பதும், கோடிக் கணக்கான ரூபாயைக் கல்லா கட்டுவதிலும் தானே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
எந்த நிலையிலும், பொதுப் பணியில் கை நனைக்காத ஆசாமி எல்லாம், வயது ஏறிவிட்டது, இனிமேல் சினிமா தொழிலில் ஜம்பம் பலிக்காது என்ற காலகட்டத்தில், ஊருக்கு இளைத்தது அரசியல்தான் என்று கருதி, பொழுது போக்கு மடம் தான் அரசியல் என்று மனப்பால் குடித்து ‘அடுத்த முதல் அமைச்சர் நானே! நானே!!’ என்று மார் தட்டுகிறார் என்றால், மக்கள் எல்லாம் என்ன இளிச்சவாயர்களா?
ஊழலைப் பற்றி எல்லாம் பேசுகிறாரே – கருப்புப் பணத்தின் மூல ஊற்று சினிமா தொழில்தானே – முதலில் அதை ஒழிக்க முன் வந்தாரா – வருகிறாரா? – இவர் மட்டும் கை சுத்தம் என்று நம்ப வேண்டுமா?
அரசியலில் திடீர் என்று குதித்து, நடத்திய முதல் விக்கிரவாண்டி மாநாடு முதல் கரூர் ‘ரோடு ஷோ’ வரை – எத்தனை உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளன! எத்தனைப் பேர் காயங்களுக்கு ஆளாகி, வாழ்நாள் முழுவதும் முடங்கி மூலையில் ஒதுங்கிக் கிடக்கும் பரிதாப நிலை!
ஒரு நூற்றாண்டு கால சுயமரியாதை இயக்கம் மக்களைப் பக்குவப்படுத்தியிருக்கிறது – தந்தை பெரியார் பகுத்தறிவு மழை பொழிந்து பக்குவப் பயிர் வளர்த்திருக்கிறார்.
சினிமா ‘மேக்கப்’ எல்லாம் இங்கு எடுபடாது – எடுபடாது!
ஏதோ சினிமா நடிகராயிற்றே, நேரில் பார்ப்போம் என்ற ரசனையில் கூடியவர்கள் எல்லாம் இவரது கட்சிக்காரர்களாகி விடுவார்களா? வாக்களிப்பவர்கள் ஆவார்களா?
இவரைப் பார்க்க வந்தவர்களே தவிர, இவர் பேச்சைக் கேட்க வந்தவர்களல்லர்! அவர் என்ன தான் பேசுகிறார்? ஏதாவது பொருள் இருக்கிறதா? எல்லாம் சினிமா டைலாக் மாதிரி ‘பஞ்ச்’ வார்த்தைகளைப் பொருள் இல்லாமல் உளறுவதைத்தவிர வேறு என்ன சரக்கு இருக்கிறது?
யாரோ எழுதிக் கொடுத்ததை, சினிமா ஸ்டைலில் ஒப்புவித்தால் அப்படியே மக்கள் மயங்கி விடுவார்களா?
முதல் அமைச்சர் அமைதிக் காப்பதைப் பலகீனமாகக் கருதுகிறார்கள் போலும்! இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் நமது பலத்தையும், தைரியத்தையும் காட்டுவோம் என்று காணொலி கூட உலவ விடுகிறார் நடிகர் என்றால், பட்டும் புத்தி வரவில்லை என்பது புரிகிறது – நன்றாகவே புரிகிறது!
வட்டியும் முதலுமாகக் கிடைக்கும் போதுதான் சேதி தெரியும்!
கரூர் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு மாபெரும் மாநாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிக்க சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், மறைமலைநகரில் – நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முழக்கமிட இருக்கிறார்.
மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் கருஞ்சட்டைக் குடும்பங்கள் மட்டுமல்ல; சமூக அக்கறை உள்ள அத்தனைத் தமிழ் மக்களும் அலை அலையாகத் திரளப் போகிறார்கள்.
எத்தனை ஆயிரம் மக்கள்கள் கூடினாலும் சிறு துளி அளவும் யாருக்கும் சங்கடமோ இடையூறோ, பொதுச் சொத்துக்குச் சேதமோ இருக்காது.
கருத்துமழை கொட்டும் மாநாடு – செவிக்கு விருந்தளிக்கும் மாநாடு – வரலாற்று முத்திரை பொறிக்கும் மாநாடு – காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அடர்த்தியான நிகழ்ச்சிகள்.
அதைப் பார்த்த பிறகாவது சினிமா கம்பெனிகளின் புத்திக்கு உறைக்கட்டும்!
1929 செங்கற்பட்டு முதல் – மாகாண சுயமரியாதை மாநாடு இன்றளவும் எவ்வாறு பேசப்படுகிறதோ, அதேபோல இந்தக் கால கட்டத்திற்குத் தேவையான மாமருந்தன்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன!
வாரீர் தோழர்காள்!
வான் மழையெனக்
கொட்டும்
கொள்கை முழக்கத்தைக்
கேளீர்! கேளீர்!!