அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின் றாரே!
அய்யா நம் பெரியார்தான் அழைக்கின் றாரே!!
அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின் றாரே!
ஆசிரியர் அய்யாதான் அழைக்கின் றாரே!!
நூற்றாண்டு விழாநாளை செங்கல் பட்டில்!
நோக்குதிசை கருப்பாக்க வா!வா! தோழா!!
மாற்றாரின் பகைமுடித்தே ஞால மெங்கும்
மாப்பெரியார் புகழேந்த வா!வா! தோழா!!
பழங்கருத்துப் பஞ்சாங்கம் சாத்தி ரங்கள்
பகுத்தறிவு நெருப்பினிலே வேக வைத்துக்
குழந்தைமணம் ஒழிகவென முரசொ லித்துக்
கொள்விதவை மணமென்றே குரல்கொ டுத்து
விழலாக வந்தஇந்தி விரட்டி நின்று
வீதியெங்கும் குறள்முழக்கம் கேட்கச் செய்து
தொழும்நம்மோர் கருவறைக்குள் சென்றே ஓதத்
தொடருழைப்பைத் தந்ததிந்த இயக்கம் தாமே!!
(அழைக்கின்றார்)
வீதிவலம் செல்லுவதைத் தடுத்து நின்றார்
விதியுடைத்து நமையணைத்தே நடக்கச் செய்து
ஜாதிமுறை சொல்லிநமைப் படிப்பே யின்றித்
தாழ்த்திவைத்த கொடுமைக்கு முடிவு கண்டே
ஓதிநலம் உரைத்ததவும், உரிமை கேட்கும்
உணர்வினையே தந்ததுவும், உலகப் பந்தில்
பாதியெனும் பெண்ணினத்தின் உரிமை மீட்டுப்
பகுத்தறிவைத் தந்ததும்நம் இயக்கம் தாமே!!
(அழைக்கின்றார்)
தீட்டென்பார் நீட்டென்பார் நரித்த னங்கள்
தினந்தோறும் எடுத்துரைத்தே விழிக்க வைக்க
மாட்டிற்குப் பொட்டிட்டு மதம்வ ளர்ப்போர்
மாயவலை அறுத்தெறிந்தே உறவைப் பேண
ஓட்டுக்குக் கன்னக்கோல் போட்டே யின்று
உருவிடுவார் வாலறுத்து நாட்டைக் காக்கக்
காட்டிடுவார் வழியொன்றைத் தலைவர் நாளை!
களங்காணக் கருஞ்சட்டைப் படையே வா!வா!!
(அழைக்கின்றார்)
– பாவலர் சுப முருகானந்தம்
மாநிலச் செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு