நாக்பூர், அக்.1 மகாராட்டிர மாநிலம், நாக்பூ ரில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், ஒரு விதவைக்கு இறந்துபோன கணவன் வாழ்ந்த வீட்டில் வசித்திட உள்ள உரி மையை மறுக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளது.
கீழமை நீதிமன்றமானது தற்பொழுது மேல்முறையீட்டை செய்த மனுதாரரின் இளைய சகோதரரின் விதவை மனைவி, தங்களது குடும்ப வீட்டில் வாழ்ந்திட உரிமை உண்டு என தீர்ப்பு அளித்திருந்தது. மேல்முறையீடு குறித்த விசாரணையில் உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்திடும் வகை யில் உத்தரவிட்டுள்ளது.
பம்பாய் உயர்நீதிமன்ற – நாக்பூர் அமர்வின் நீதிபதி ஊர்மிள ஜோஷி – பால்கே உறுதி செய்திட்ட தனது தீர்ப்பில், உரிய சட்டத்தின் விதி 17–இன்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் தமது குடும்பம் வாழ்ந்த வீட்டில் ஒரு பகுதியினை பெறவும், அதில் தங்கி வாழ்ந்திட உரிமை உண்டு என கூறியுள்ளார். அந்த வீட்டில், பாதிப்புக்கு உள்ளான விதவைப் பெண் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்தாரா இல்லையா என்பது பொருட்டல்ல.
மேலும் உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில், குடும்பத்தினர் சேர்ந்து வாழும் இல்லத்தில் தான் வாழ்ந்திடும் உரிமையினை மறுத்தால், அவர் சட்டப்படி பாதிப்புக்குள்ளாகிறார். அந்த விதவைப் பெண்ணை வீட்டிலிருந்து வெளியேற்றிட யாருக்கும் உரிமையில்லை என பட்ட வர்த்தனமாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1990 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. நாக்பூரில் உள்ள தனது கணவனின் குடும்ப வீட்டில் அவரோடு வாழத் தொடங்கினார். கணவர் தனது தாயாரிடமிருந்து, பரம்பரைச் சொத்தில், குடும்ப வாரிசாகப் பெற்ற சொத்தைக் கொண்டுதான், தனது மனைவி யுடன் வாழ்ந்து வந்த குடும்ப வீட்டின் முதல் தளமாகக் கூடுதலாக ஒரு வீட்டைக் கட்டினார். 2008 ஆம் ஆண்டில், கணவர் இறந்துவிடுகிறார். ஒரு மகன், அந்த இணையருக்கு இருக்கிாறர்.
கணவன் இறந்த பிறகு, அவரது மூத்த சகோதரர், தாங்கள் வாழும் குடும்ப வீட்டில் விதவைப் பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் அனுமதி மறுக்கிறார். அதற்கு அவர் சொல்லக் கூடிய காரணம், 2004 ஆம் ஆண்டிலிருந்து தங்களது குடும்ப வீட்டில், தனது இறந்துபோன சகோதரரின் மனைவி வசித்திடவில்லை என்பதுதான்.
வீட்டின்மீது உரிமை கிடைக்காத நிலையில், அந்த விதவை, முதலில் மாஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் மனு செய்து தங்களுக்கான உரிமையினைப் பெற்றுத் தர கோருகிறார். ஆகஸ்டு 2022, செஷன்ஸ் நீதிமன்றமானது உரிமை கோரப்பட்டுள்ள வீட்டில், அந்த விதவைப் பெண்ணுக்குள்ள கீழ் தள வீட்டில் வசித்திடும் உரிமையை உறுதி செய்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றமானது கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உறுதி செய்து, அந்த விதவைப் பெண்ணுக்கான அவரது சொத்து உரிமையினையும், அந்த வீட்டில் வசித்திடும் உரிமையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது பலரது பாராட்டுதலுக்கானது.
கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெண், தனது கணவர் இறப்பிற்குப் பின், தனது கணவன் கட்டிய வீட்டில் உள்ள உரிமை மட்டுமல்லாமல், அந்தக் குடும்பம் வாழ்ந்து வரும் வீட்டிலேயே வசித்திடும் உரிமையினையும் வழங்கியுள்ளது – விதவைப் பெண்களுக்குச் சொத்துரிமை பெறும் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இத்தீர்ப்பு விளங்குகிறது.
1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில், பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் உரிமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நடைபெற்ற இடைவிடா போராட்டத்தால், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு காலத்தில், ஒரு விதவைப் பெண்ணுக்கும் குடும்பச் சொத்தில் உரிமை கிடைக்கிறது என நீதிமன்றம் நியாயம் வழங்கியது தந்தை பெரியாரின் தொலைநோக்கிலான பெண் உரிமைபற்றிய சிந்தனையின் வெளிப்பாடே!