புதுடில்லி, செப்.30 நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக-வையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. பிரமுகர் கொலை மிரட்டல்
இதற்கிடையே பா.ஜ.க செய்தி தொடர்பாளரான பிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ”ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்” எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில் காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொடூரமான வகையில் பிந்து மாகாதேவ் கொடூரமான கொலை மிரட்டல் விடுத்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. இது வாய் தவறியோ அல்லது அலட்சியமாகவோ கூறப்படவில்லை. இது மக்களின் பிரச்சினைக்காக அவர்களுடன் நிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொடூரமான கொலை மிரட்டல் ஆகும். இது சட்டத்தின் ஆட்சியின் மீதான, ஒவ்வொரு குடிமகனுக்கும், ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்.
ஜனநாயகம்மீதான தாக்குதல்
ராகுல் காந்திக்கு பல்வேறு நிலைகளில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக பாஜக-வின் நோக்கம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது.
* இது மக்களின் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராகத் தீட்டப் படும் ஒரு பெரிய, கொடூரமான சதித்திட்டமா?
* பொது வாழ்வில் நஞ்சை விதைக்கும் கிரிமினல் மிரட்டல், கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறை அரசியலை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறீர்களா?
* ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகம் மீதான தாக்குதல்.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை
* பிந்து மகாதேவ்-க்கு எதிராக உடனடி மற்றும் முன்னுதார மான நடவடிக்கையை மாநில காவல்துறையினர் எடுக்க வேண்டும்.
* பாஜக தலைமையிடம் இருந்து திட்டவட்டமான கண்டனமும், பொது மன்னிப்பும் தேவை.
* பாஜக அவ்வாறு செய்யத் தவறினால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இழிவான செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று நாடு நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.