புதுடில்லி, செப்.30 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான சைகைகளில் ஈடுபட் டனர். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியது போன்றும், விமானம் கீழே விழுந்து நொருங்குவது போன்றும் சைகை காட்டினார். இது கடும் பேசும்பொருளானது. பிசிசிஐ இது தொடர்பாக அய்சிசி-யிடம் புகார் அளித்தது.
இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று (29.9.2025) இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் மறுத்துவிட்டார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் “விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடிவுதான்- இந்தியா வெற்றி பெற்றது! நம்முடைய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கெரா, அந்த பதிவை டேக் செய்து “பிரதமர் ஜி, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியானது அல்ல. 2ஆவது, நீங்கள் எந்த வகையிலும் ஒப்பீடு செய்திருந்தால், அதன்பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, வெற்றியை (ஆபரேஷன் சிந்தூர்) நெருங்கி வந்தபோது, எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் சண்டை தன்னுடைய தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதை வைத்துதான் கெரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.