சென்னை,மே25 – சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே 28ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்.
கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் கத்திரி வெயில் காலம் தற்போது நிலவுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்தது. குறிப்பாக, நடப்பாண்டின் கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை (108 டிகிரி) வேலூரில் கடந்த 15ஆம்தேதி பதிவானது. இதற்கு மறுநாள்(மே 16), சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதன்பிறகு, கோடைமழை காரணமாக, சில நகரங்களில் வெப்பநிலை சற்று குறைந்தது. இருப்பினும், பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 13 நகரங்களில் நேற்று (24.5.2023) வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.
திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, கடலூர், ஈரோடு, பாளையங் கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பதிவானது. நாகப்பட்டினத்தில் 99 டிகிரி பதிவானது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும்.