செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
சென்னை, செப்.28 சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘தினத்தந்தி‘ நாளிதழின் நிறுவனரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான சி.பா.ஆதித்தனாரின் 121 ஆம் பிறந்த நாளான நேற்று (27.9.2025) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவருடைய படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
பெரியாரின் பாராட்டுப் பெற்ற, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றவர் ‘தினத்தந்தி’யின் நிறுவனர் அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்.
ஆதித்தனார் அவர்கள் குடும்பத்திற்கும், தந்தை பெரியாருடைய கொள்கைக்கும் மிகப்பெரிய அளவிற்குத் தொடர்பு உண்டு. இந்த நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர் நாட்டில்கூட தொடர்புகள் உள்ளன.
அவருடைய நினைவைப் போற்றி, அவருடைய பிறந்த நாள் மூலமாக, அவர் உருவாக்கிய தமிழின உணர்வையும், மொழி உணர்வுப் பாதுகாப்பையும், எந்நிலையிலும், ஹிந்தித் திணிப்பை எதிர்க்கக்கூடிய அவருடைய உணர்வுகளையும் என்றைக்கும் வரவேற்று, நன்றி பாராட்டி, அவருடைய பாதையில் தொடர்ந்து நடப்போமாக!
– இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.