திருப்பதி, செப்.28– திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து யுகந்தர், கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை அதிகாரிகளின் உதவியுடன், அய்தராபாத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் தொலைதூர கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து அடுத்தடுத்து 4 பட்டப் படிப்புகளை அவர் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து 3 பட்ட மேற்படிப்புகளை படித்து முடித்துள்ளார். சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதால் தங்கப் பதக்கம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்தது. வரும் 30ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் 26ஆவது ஆண்டு விழாவில், யுகந்தருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
உயர்தொழில்நுட்பத்தில்
மின்சார வாகனம் அறிமுகம்
மின்சார வாகனம் அறிமுகம்
கோயம்புத்தூர், செப்.28- சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில், வால்வோ கார் இந்தியா (Volvo Car India) நிறுவனம் மின்சார காரான வால்வோ இ.எக்ஸ். 30 (EX30) மாடலை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
வால்வோ கார்களின் மூன்றாவது EV மாடலான இது, பெங்களூருவின் ஹோசகோட்டேயில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இது நிலையான நகர்வு, புதுமையான தொழில்நுட்பம், எதிர்கால வடிவமைப்பு மற்றும் சமரசம் செய்யாத பாதுகாப்பு ஆகியவற்றிற்கான உறுதிப்பாட்டை உள்ளடக்கியது.
இந்நிறுவன தயாரிப்பு வரிசையில் மிகவும் நீடித்த நிலையான காராக, இஎக்ஸ் 30 (EX30) ஆனது. இதுவரை உள்ள முழு மின்சார வால்வோ கார்களை விட மிகக் குறைந்த கார்பன் தடயத்தைத் கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் மின்சார வாகன அனுபவத்தை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது என இந்நிறுவன இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு; அக்டோபர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப்.28-
2025ஆம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2025ஆம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மய்யங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மய்யத்திற்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அக்டோபர் 17ஆம் தேதிக்குள் கிடைத்துவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.