கருத்தியல் அடிப்படையில் அவர், திருமாவளவனையும், விடுதலைச் சிறுத்தைகளையும் முழுமையாகப் புரிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார்!

8 Min Read

தமிழ்நாட்டில் முதுபெரும் தலைவர், மூத்த தலைவர் – ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்தான்! இன்றைக்கு நம்முடைய திராவிட அரசியலின் மய்யமாக இருக்கிறார்!

‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. நெகிழ்ச்சியுரை

சென்னை,  செப்.28  தமிழ்நாட்டில் முதுபெரும் தலைவர், மூத்த தலைவர் – ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்தான், இன்றைக்கு நம்முடைய திராவிட அரசியலின் மய்யமாக இருக்கிறார். அவர், மனப்பூர்வமாக விடுதலைச் சிறுத்தைகளை மூன்றாவது குழல் என்று சொல்கிறார் என்றால், எந்த எதிர்பார்ப்பினாலும் கிடையாது; என்னைத் திருப்திப்படுத்தவேண்டும் என்கிற தேவை அவருக்குக் கிடையாது. கருத்தியல் அடிப்படையில் அவர், திருமாவளவனையும், விடுதலைச் சிறுத்தைகளையும் முழுமையாகப் புரிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார்; ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றார்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

Contents

‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை

‘‘சாதிப் பெருமை’’   (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்  Caste Pride ஆங்கில நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இரண்டாவது வழக்கு, ‘ரெட்டிகாடு Vs கொண்டா ரெட்டி’ வழக்கு – 1900 ஆம் ஆண்டு.

இந்த வழக்கில், கிறித்தவ மதம் மாறிவிட்டார்.

முன்பு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் மாலா ஜாதியில் பிறந்தவர். தெலுங்கு பேசுகின்ற ஜாதியினர் தீர்ப்பில், பறையேறு என்கின்ற பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான தலைவராக இரட்டைமலை சீனிவாசனை சுருக்கிவிட்டனர்!

அந்தத் தீர்ப்பில் ‘பறையான்’ என்று போட்டி ருக்கிறார்கள். இன்றைக்கு சில பேர் கிளம்பியிருக்கி றார்கள், இரட்டைமலை சீனிவாசன், ‘பறையர்’ களுக்காகத்தான் பாடுபட்டார் என்று ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான தலைவராக அவரைச் சுருக்கிச் சொல்லு கிறார்கள்.

அனைவருக்குமான தலைவர் அவர்!

அவர், ‘பறையர்’ என்ற ஜாதிப் பற்றோடு இயங்க வில்லை. அனைவருக்குமான ஒரு தலைவராக இருந்தார். ‘பறையா’ என்ற ஒரு சொல், பொதுவான சொல்.  பன்னாடு முழுக்க பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுப் பெயர். அன்றைக்கு என்னென்ன ஜாதிகள் இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது; பட்டியல் படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டிற்குள் எத்தனை ஜாதி இருக்கிறது? ஆந்திராவிற்குள் எத்தனை ஜாதி இருக்கிறது? மதராஸ் பிரசிடென்சிக்குள் எத்தனை ஜாதி இருக்கிறது? என்று யாருக்கும் தெரியாது; அப்போது பட்டியல் படுத்தவில்லை.

ஆனால், தீண்டத்தகாதவர்களை ‘பறையான்’ என்று ஒரு பொதுப் பெயரில் அழைத்திருக்கிறார்கள்; இது அந்தத் தீர்ப்பில் இருக்கிறது என்பதையும் இந்நூலா சிரியர் பதிவு செய்திருக்கிறார்.

மெட்ராஸ் மாகாணத்தில், அனைத்துத் தீண்டத்தகாதவரையும் ‘பறையர்’ என்று அழைப்பது வழக்கமாக இருந்தது!

‘பறையர்’ என்ற பொதுப் பெயரால் குறிப்பிடப்படு கின்றனர். தமிழ்ப் பேசுகிறவர்களிடையே ‘பறையர்’ என்கின்ற ஒரு குறிப்பிட்ட ஜாதி இருந்தபோதும், மெட்ராஸ் மாகாணத்தில், அனைத்துத் தீண்டத்தகாத வரையும் ‘பறையர்’ என்று அழைப்பது வழக்கமாக இருந்தது.

நீ கிறித்தவ மதத்திற்கு மாறியிருந்தாலும், முழுமையாக கிறித்தவராக மாறாமல், பழையபடி, ஜாதியைப்பற்றி நீ நின்றால், நீ கீழ்ஜாதிக்காரன் என்றுதான் எடுத்துக்கொள்வோம். அதன்படி உனக்குத் தண்டனை கொடுப்போம்.

ஸ்டாக்ஸ் சட்டம் ஜாதியை ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறது!

அப்படியென்றால், அந்த சட்டம் எதைப் பார்க்கிறது என்றால்,  மதத்தை ஒரு காரணியாக எடுத்துக்கொள்ள வில்லை. ஜாதியை ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறது.

இந்திய மண் முழுவதும் எந்தப் பிரச்சினையைத் தொட்டாலும், ஜாதிதான் அடிப்படைக் காரணி. அதை வைத்துத்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள்.

சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் சரி, வேறு எந்தவிதமான நிலைப்பாட்டினை எடுப்பதாக இருந்தாலும் சரி, ஜாதியை ஓர் அளவுகோலாகக் கொள்கிறார்கள்.

மனுஸ்மிருதியோடு பொருத்திப் பாருங்கள்!

வாரணாசியில் இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களிடம் சென்று, ‘‘உங்கள் சட்டத்தில், பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை இருக்கிறது. பார்ப்பனர்களுக்கு மட்டும் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும்’’ என்று சொல்கிறார்கள்.

உடனே, விலக்குக் கொடுக்கப்படுகிறது.

பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை இல்லை. இதை எதையோடு பொருத்திப் பார்க்கவேண்டியது என்றால், மனுஸ்மிருதியோடு பொருத்திப் பார்க்கவேண்டும். அதைத்தான் மனுதர்மம் சொல்கிறது.

மன்றோ என்ன சொல்கிறார் என்றால், ஒரு முற்போக்கு ஆளாக இல்லாமல், ஏன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்.

மன்றோ, ரயாத்துவாரி நில வருவாய் அமைப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறார். அதில், மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த சற்றே முன்னேறிய சூத்திரர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தன.

அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த சர் தாமஸ் மன்றோ, கீழ்ஜாதிகளுக்குக் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற நிலையை நியாயப்படுத்துகிறார்.

கீழ்ஜாதியினர்மீது வெறுப்பு அரசியல்!

இந்துக்களிடையே ஆதிக்கம் செலுத்திய பிரிவின ருக்கு, கீழ்ஜாதியினர்மீது இருக்கும் வெறுப்பே, வெறுப்பு அரசியல் – இன்றைக்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக அதைத் திரட்டிக் குவிக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக உழைக்கும் மக்களுக்கு எதிரான, கீழ்ஜாதி மக்களுக்கு எதிரான ஒரு வெறுப்பு அரசியல் – நீண்ட காலமாக இருக்கிறது.

அந்த வெறுப்பினை தண்டனைக் கொள்கை மூலமாக நிர்வணப்படுத்துவதால், அவர்களின் ஆதரவையும் வென்றுவிடலாம் என்று நினைத்ததைக் குறிப்பால் உணர்த்துகிறார் இந்நூலாசிரியர்.

இதனுடைய சாராம்சம் என்னவென்றால், மேல்ஜாதிக்காரர்கள் நமக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றால், கீழ்ஜாதிக்காரனுக்கு நாம் கடுமையான தண்டனைக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் மேல்ஜாதிக்காரர்களைத் திருப்தி செய்ய முடியும்.

இந்த உளவியல்தான், பி.ஜே.பி.யின் மனப்பான்மை; ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மனப்பான்மை.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி. காலூன்றக்கூடாது, ஏன்?

ஏன், அவர்கள் வரக்கூடாது? தமிழ்நாட்டில் ஏன் அவர்கள் காலூன்றக்கூடாது? அவர்கள் வந்தால் என்னாகும்? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.

இன்றைக்கு ஒன்றிய ஆட்சியில் இருப்பதால், எப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் அவர்கள் கொண்டு வருகிறார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.

அவர்கள் நினைப்பதை சட்டமாக்குகிறார்கள்!

இதுவரை, இந்திய நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ஓர் எதேச்சதிகாரமான போக்கை, பாசிசப் போக்கை, எதைப்பற்றியும் கவலைப்படாமல், அரசியல் நெறிமுறைகள் எதுவும் இல்லாமல், அவர்கள் நினைப்பதை சட்டமாக்குகிறார்கள்.

அதில் ஒன்றுதான், சி.ஏ.ஏ. சட்டம்;  மிக மோசமான ஒரு குடியுரிமைச் சட்டம். வக்பு திருத்தச் சட்டம், மிக மோசமான குடிமைச் சட்டம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது நாம் எதிர்த்தோமே, எஸ்.அய்.ஆர்.

அரசியல் நெறிமுறைகள் அவர்களுக்குக் கிடை யாது. ஏனென்றால், அவர்கள் நினைத்ததைச் சாதிக்கவேண்டும், அவ்வளவுதான்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை  இரண்டே வருணம்தான்!

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்,  கீழ்ஜாதிக்கு எதிரான வெறுப்பு – கீழ்ஜாதி என்றால் என்ன? நாம் நான்கு வருணம் என்று சொல்கிறோம்; ஆனால்,  பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இரண்டே வருணம்தான்.  பார்ப்பனர் – சூத்திரர் அவ்வளவுதான்.

இந்தியச் சமூகக் கட்டமைப்பில் இரண்டே வர்ணம்தான். அதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால்,  பரசுராமர் எல்லா சத்திரி யர்களையும் கொன்றுவிட்டார் என்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மன்னர்களை, குடும்பத்தோடு இனப்படுகொலை செய்துவிட்டார் பரசுராமர் என்கிறார்கள்.

வைசியர் என்ற ஒரு சமூகம் இருக்கிறது என்பதைப் பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அப்படி ஒரு வர்ணம் கிடையாதாம்.

நாங்கள் உயர்ந்தவர்கள் – நீங்களெல்லாம் தாழ்ந்த வர்கள், இதுதான் பார்ப்பனர்களின் மனநிலை. இதுதான் பா.ஜ.க.வின் மனநிலை; இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் மனநிலை.

பெரியாரைப் படிக்கவேண்டும்!

இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், பெரியாரைப் படிக்கவேண்டும்; இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், ‘சாதிப் பெருமை’ நூலைப் படிக்கவேண்டும்.

இதை நாம் சொல்வதால், பார்ப்பனர்கள்மீது வெறுப்புக் கொண்டு பேசுகிறோம் என்று கருதக்கூடாது. தனிநபர் யாரையும் நாம் வெறுப்பதில்லை.

தோழர் விஜயசங்கர் அவர்கள், இந்த மேடையில் வந்து நம்மோடு அமர்ந்து, அய்யா ஆசிரியர் அவர்க ளோடு இருந்து, அரசியலைப் பேச முடிகிறது என்றால், கருத்தியல் ஒற்றுமை.

என்மீது என்னென்ன முத்திரையையோ குத்தப் பார்க்கிறார்கள்!

இந்த இடத்தில் யாரும் ஜாதிப் பார்ப்பதோ, வருணம் பார்ப்பதோ கிடையாது. அது கூடாது என்பதுதானே நம்முடைய கொள்கை.

ஜாதீய வாதிகள் என்னைப் பார்த்து, இவர் பொதுவான தலைவர் கிடையாது; இவர் தலித் என்று ஒதுக்கி, ஒரு முத்திரையைக் குத்தப் பார்க்கிறார்கள்.

தலித்துகளில் இருப்பவர்கள், திருமாவளவன் தலித் அல்ல; ‘பறையன்’ என்று முத்திரைக் குத்தப் பார்க்கிறார்கள்.

‘பறையர்’களில் இருப்பவர்கள், திருமாவளவன், ‘பறையர்’ இல்லை; அவர் ‘பறையருக்கு’ எதிரி என்கி றார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், ‘‘நான் பெரியாரின் பிள்ளையாக இருப்பதுதான்.’’

நான், பெரியார் பாசறையில் பயின்றவன் என்பதினால்,
தி.மு.க..வை நான் ஆதரிக்கிறேன்!

நான், தி.மு.க.வை ஆதரிக்கின்றேன் என்றால், தி.மு.க.வோடு இருந்தால், பதவிக்கு வரலாம் என்பதற்காக அல்ல. நான், பெரியார் பாசறையில் பயின்றவன் என்பதினால், தி.மு.க..வை ஆதரிக்கிறேன்.

2, 3 சீட்டுகளுக்காக தி.மு.க.விற்குக் கொத்தடி மையாக திருமாவளவன் இருக்கிறார் என்கிறார்கள்.

அதுகூட உன்னால் வாங்க முடியாமல்தானே வெளியில் கிடக்கிறாய்; ஒரே ஒரு கவுன்சிலர் தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லையே, உன்னால். அதிலென்ன பெருமை!

அரசியலில், உத்திதான் முக்கியம்;

யாரோடு கூட்டணி சேரவேண்டும்? எப்படி வெற்றி பெறவேண்டும்? எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் ஸ்டேட்டஜி.

அந்த அடிப்படையில்தான், இன்றைக்குத் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், ஏன், தென்னிந்திய அரசியல் வரலாற்றில், இதுவரையில் நிகழ்த்த முடியாத சாதனையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்த்தியிருக்கிறது. திரா விட முன்னேற்றக் கழகத்தோடும், திராவிடர் கழகத்தோடும் இணைந்து பணியாற்றிய சூழலில்.

மூன்றாவது குழல் விடுதலைச் சிறுத்தைகள்!

அதிகாரத்திற்காக நாங்கள் பணியாற்றவில்லை. இப்பொழுதுகூட ஆசிரியர் அய்யா அவர்கள், ஒரு புத்தகத்தைக் கொடுத்து, மூன்றாவது குழல், சும்மா இருக்கக்கூடாது என்று உரிமையோடும், உணர்வோடும் சொல்கிறார்.

திராவிட அரசியலின் மய்யமாக இருக்கிறார்!

தமிழ்நாட்டில் முதுபெரும் தலைவர், மூத்த தலைவர் – ஆசிரியர் அய்யா அவர்கள்தான். இன்றைக்கு நம்முடைய திராவிட அரசியலின் மய்யமாக இருக்கிறார். அவர், மனப்பூர்வமாக விடுதலைச் சிறுத்தைகளை மூன்றாவது குழல் என்று சொல்கிறார் என்றால், எந்த எதிர்பார்ப்பினாலும் கிடையாது; என்னைத் திருப்திப்படுத்தவேண்டும் என்கிற தேவை அவருக்குக் கிடையாது.

திருமாவளவனையும், விடுதலைச் சிறுத்தைகளையும் முழுமையாகப் புரிந்திருக்கிறார்!

கருத்தியல் அடிப்படையில் அவர், திருமாவள வனையும், விடுதலைச் சிறுத்தைகளையும் முழுமை யாகப் புரிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார்; ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியம்.

மனோஜ் மிட்டா அவர்கள், தமிழ்நாட்டில் இருந்திருந்தால், ஒன்று திராவிடர் கழகத்தில் இருப்பார்; இல்லையென்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பார். அந்தப் பார்வை அவரிடத்தில் இருக்கிறது; அந்தத் தெளிவு அவரிடத்தில் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *