போபால், செப். 27- பசுக்களின் பாதுகாவலர்கள் என்று அடையா ளப்படுத்தி கொள்ளும் பாஜக, மாட்டிறைச்சிக்கு ஜிஎஸ்டியில் வரி விதிக்காமல் உள்ளது. இது பாஜகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச மாநில தலைவர் ஜிது பத்வாரி அறிவித்துள்ளார். மேலும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பசு மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வோரை தடுக்க பாஜகவினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் பசுக்களின் பாதுகாவலர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்ளும் பாஜக, மாட்டிறைச்சிக்கு ஜிஎஸ்டி விதிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச மாநில தலைவர் ஜிது பத்வாரி கூறியுள்ளதாவது:
மத்திய பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கவில்லை. கோமாதா என்று பேசி வரும் பாஜக மாட்டிறைச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்காதது ஏன்? இது பாஜகவின் இரட்டை முகத்தை காட்டுகிறது அல்லவா?. சமீபத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் அனைவரும் வீடுகளில் பசுக்களை வளர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் நாய் உட்பட பிறவற்றை வளர்க்கட்டும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்பது இந்து, ஜெயின், இந்திய கலாசாரத்துடன் கூடிய ‘வாழு வாழவிடு’ என்பதாகும். இந்து மதம் உலகம் முழுவதும் விலங்குகள் மீதும் நல்ல அன்பை வெளிப்படுத்த கூறுகிறது. உலக நலன் பற்றிப் பேசும்போது, நாம் அனைத்தையும் பற்றி தான் பேசுகிறோம்.
இதில் விலங்குகள், காடுகள், இயற்கை வளங்கள் உள்பட அனைத்தும் அடங்கும். ஆனால் பாஜக வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே பசு மாட்டின் பெயரைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு, அந்த ஏற்றுமதி எளிதாக்கப்பட்டுள்ளது.
பாஜக பசுக்களை வெட்டி ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முந்தைய ரெக்கார்ட்ஸ் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இறைச்சி எங்கிருந்து வருகிறது? இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால், மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசு இருக்கும்போது அது எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வி வருகிறது. இதனால் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.
மேலும் மாட்டிறைச்சி தொடர்பான டேட்டாவையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2024-2025 நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தது. இங்கிருந்து ரூ.9,387 கோடி ரூபாய்க்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ரூ.8,338 கோடி மாட்டிறைச்சியுடன் தார் 2ஆவது இடத்திலும், ரூ.4,330.4 கோடி மாட்டிறைச்சியுடன் ரெய்சன் 3ஆவது இடத்திலும், ரூ.2,402.7 கோடியுடன் சிங்ராலி 4ஆவது இட்ததிலும் ரூ.2,195.8 கோடி மாட்டிறைச்சியுடன் சீசோர் 5ஆவது இடத்திலும் உள்ளது.
அதேபோல் திவாஸ் ரூ.2,045.2 கோடி மாட்டிறைச்சியுடன் 6வது இடுத்திலும், உஜ்ஜைன் ரூ.11857 கோடி மதிப்பிலான மாட்டிறைச்சியுடன் 8 வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தானில் மட்டும் கடந்த 2023-2024ஆம் நிதி ஆண்டில் 152.25 ஆயிரம் டன் மாட்டிறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டி உள்ளது.