சந்திப்போம் சங்கமிப்போம் சங்கநாதம் செய்வோம் வாரீர்! வாரீர்!!

4 Min Read

மின்சாரம்

‘‘மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் கொண்டாட முடியாது!’’ என்றார் உலகத் தலைவர் தந்தை பெரியார். (‘குடிஅரசு’ 8.10.1933).

எவ்வளவு ஆழமான உண்மையான கருத்து. சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்றால் அவனுக்காகப் பிரச்சாரம் எதற்கு?

வேறு ஒன்றும் இல்லை; அதை வைத்து ஜாதியைக் காப்பாற்ற முடிகிறது. அதை வைத்து தாங்கள் ‘பிராமணர்’ பிர்மாவின் முகத்தில் பிறந்தவன்; நாங்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் சூத்திரர்கள், படிக்கக் கூடாதவர்கள், உடலுழைப்புக்காரர்கள் என்று சொல்லுவதற்குப் பக்தியின் மூலம் நமது மூளையை விலங்கு போடுவதற்கும் இது பயன்படுகிறது – அதை வைத்து ஒரு சொட்டு வியர்வைகூட சிந்தாமல் அடுத்தவன் உழைப்பையும் பொருளையும் ஒரு கூட்டம் சுரண்ட முடிகிறது.

அதன் காரணமாகத் தான் சமத்துவத் தந்தை பெரியார் அவர்கள் பிறப்பின் அடிப்படையில்  பேதம் பேசும் மூலவேரில் கை வைத்தார்! கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்றார். மதம் மனித சமத்துவத்திற்கு எதிரி என்றார். ஜாதியைக் கட்டிக் காக்கும் காவல்காரனாக இருக்கும் சாஸ்திரங்களை எரிக்கச் சொன்னார் – ஏன், எரிக்கவும் செய்தார். மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிக்கும்  போராட்டத்தையும் நடத்திக் காட்டினார்.

ஒரு கட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் அரசமைப்பு சட்டத்தின் பகுதியையும் எரிக்கும் போராட்டத்தையும் நடத்தினார். பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகப் போராட்டத்தில் குதித்தனர் – வெஞ்சிறை ஏகினர் –  பலர் செத்தும் மடிந்தனர்.

சாலையில் நடக்க உரிமை, குளத்தில் குளிக்க உரிமை, கோயிலுக்குள் நுழைய உரிமை என்கிற உரிமைப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார்.

இன்னும் ஒரே ஒரு இடம், அதுதான் கோயிலின் கர்ப்பக்கிரகம், அதற்குள் ‘பிர்மா’வின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் (பிர்மா ஆண் கடவுள் அப்படித்தானே!) கூட்டம் மட்டும்தான் அந்தக் கோயில் கருவறைக்குள் செல்ல முடியும். பூஜை புனஸ்காரங்களைச் செய்ய முடியும். மற்றவர்கள் முறையாக ஆகமங்களைப் படிந்திருந்தாலும், கோயில் கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைய முடியாது – அப்படி மீறி நுழைந்தால் கர்ப்பக் கிரகம் தீட்டாகி விடும்; ஏன் சாமியே செத்துப் போய் விடும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அடம் பிடித்தனர்.

எல்லா இடங்களிலும் தந்தை பெரியாரின் கைத்தடியால் அடிப்பட்ட ஜாதிப் பாம்பு, கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து பாதுகாப்பாக இருக்கிறது.

அதனால்தான் அதற்கான இறுதிப் போராட்டத்தை இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தைப் பிரகடனப்படுத் தினார் தந்தை பெரியார்!

அவர் நடத்திய இறுதி மாநாடுகூட ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு’’தான் – என்பது நினைவில் இருக்கட்டும் (1973 டிசம்பர் 8,9).

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார், நீதிமன்றம் சென்று முடக்கினர் முப்புரியாளர்கள்.

‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தப் பிரச்சினையில் ஒரு கட்ட வெற்றி பெற்று 24 பார்ப்பனர்  அல்லாதாரை அர்ச்சகராக்கினார்; பெண் ஒருவரை ஓதுவாராக்கினார் (15.8.2021).

அர்ச்சகர் பயிற்சி பெற்ற 383க்கு மேற்பட்டவர்; பணி ஆணைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆனாலும் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோயில் கருவறைக் கதவினை பார்ப்பனர் அல்லாதாருக்குத் திறந்து வைத்து வரலாற்றில் மிளிரும் வைரக் கல்லாக ஜொலிக்கிறார்.

அந்தவரலாற்று நாயகர் மறைமலை நகரில் நாம் நடத்தவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.

‘முதலமைச்சர் அவர்களே, வருக வருக! தந்தை பெரியாரின் பேர் பெற்ற பேரரே வருக வருக!’ என வாயார மனமார கையார வாழ்த்துகிறோம் – வரவேற்கிறோம்!

மாநாடு நமது ஒப்பற்றக் கழகத் தலைவர் தலைமையில் கூடுகிறது. பெரியார் சமூகக்காப்பு அணியின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கழகக் கொடியை உயர்த்துகிறார் கழகத் தலைவர். அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு ஆ. இராசா மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்துகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., ‘‘உலகத் தலைவர் பெரியார்’’ என்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று இறுதித் தொகுதியை வெளியிட்டு சங்கநாதம் செய்யவிருக்கிறார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவருமான, பெரியார் விருது பெற்ற மானமிகு கனிமொழியின் கருத்து மழையுண்டு. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.ெஹச். ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், மாநில செயலாளராகி  நம் மாநாட்டின் முதல் முழக்கம்! கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

பேரணி இல்லாமலா? கொள்கை முழக்கத்துடன் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. ஒரு நாள் மாநாட்டில் இத்தனை நிகழ்ச்சிகளா? மலைப்பாகத்தான் இருக்கும்! ஆனாலும் நேரக் கட்டுப்பாட்டுடன் அத்தனை நிகழ்ச்சிகளும் நேர்த்தியாக அரங்கேறும்.

கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள கழகக் குடும்பத்தினர் பெருந் திரளாக வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மறைமலை நகர் தாங்குமா? மக்கள் கடலில் மறைமலைநகர் மிதக்கட்டும்! முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு 96 ஆண்டுகளுக்குமுன் செங்கற்பட்டில் கூடிய முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் இன்றும் பேசு பொருளாக உள்ளதுபோல் இம்மாநாட்டுத் தீர்மானங்களும் திசை காட்டும் ஒளி விளக்காக அமையும்.

மாநாடு போகாமல் இருப்போமா? மகிழ்ச்சிக் கடலில் குளிக்காமல் வீட்டில் முடங்கித்தான் கிட்பபோமா?

தலைவரே ெசால்லி விட்டார் – தந்தை பெரியார் அழைக்கிறார் என்று.

சந்திப்போம் – சங்கமிப்போம் தோழர்களே – சங்கநாதம் – செய்வோம், வாரீர்! வாரீர்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *