வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத்
தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில்
ரூ.4 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்க ஆணையிட்ட நமது முதலமைச்சருக்கும்,
அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரள அரசு, அமைச்சர், அதிகாரிகளுக்கும் நன்றி, பாராட்டு!
வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்க ஆணையிட்ட நமது முதலமைச்சருக்கும், அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரள அமைச்சர் அதிகாரிகளுக்கும் நன்றி, பாரட்டுத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்றைய கேரளா – அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வைக்கத்தப்பன் என்றழைக்கப்படும் மகாதேவன் கோவில் உள்ள தெருக்களில், கீழ்ஜாதியினர் என்று ஹிந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களான, ஈழவர், தீயர், புைலயர் முதலிய பலரும் நடக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அத்தெருப்பக்கம் வந்தால், நடந்தால், கடவுளுக்குத் ‘தீட்டுப்’ பட்டுப் போகும்; எனவே, உரிமையில்லை என்று ஹிந்து ஸநாதன தர்மத்தினைப் பின்பற்றிய அந்நாட்டு மன்னர் ஆட்சியானது நடைமுறைப்படுத்தியது!
மனித உரிமைக்கான சத்தியாகிரகப் போராட்டம்
உயர்ஜாதி நம்பூதிரிப் பார்ப்பனர்களும், மற்ற சில முன்னேறிய ஜாதியினரும்கூட இதை வலியுறுத்திய நிலையில், வைக்கத்தில் காங்கிரஸ்காரர்களும், முற்போக்காளர்களும் மனித உரிமைக்கான சத்தியாகிரகப் போராட்டத்தினைத் தொடங்கினர் – 1924 இல்!
அதற்காக அந்நாட்டு அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு, அந்த சத்தியாகிரகப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தது.
‘அருவிக்குத்தி’ சிறையில் அடைக்கப்பட்டார் தந்தை பெரியார்!
அந்த நேரத்தில், அவர்களது வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் (தலைவராக) இருந்த தந்தை பெரியார் வைக்கத்திற்குச் சென்று, சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கி, அப்போராட்டத்திற்கு வலுவூட்டி வீறு கொள்ளச் செய்தார். இரண்டு முறை கைது செய்யப்பட்டார். அவருக்கு அடுத்து, அய்யாவின் அருந்துணைவியார் ஈ.வெ.ரா.நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் முதலிய பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், முதல் முறை அருவிக்குத்தி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெரியார், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதினால், இரண்டாம் முறை கைது செய்யப்பட்டு, திருவாங்கூர் சிறைச்சாலையில் 6 மாதம் கடும் சிறைத் தண்டனைக்கு ஆளாகினார்.
தந்தை பெரியாரும், அவருடன் தண்டிக்கப்பட்ட சில சத்தியாகிரகிகளும் வைக்கத்தில், சுமார் ஒரு மணிநேரம் அருவிக்குத்திக்கு ஆற்றின் வழி படகில் அழைத்துச் செல்லப்பட்டபோது, பருவ மழை, புயல், காற்று, பெருத்த அலைகளால் படகு கவிழ்ந்து, மூழ்கிவிடும் அபாய நிலை; படகோட்டி, படகில் இருந்தவர்களைப் பார்த்து, ‘‘கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் – பிழைப்பதற்கு’’ என்று கூறிட, படகில் இருந்தவர்கள் பிரார்த்தனையில் மூழ்கிவிட்ட நிலையில், தந்தை பெரியார் மட்டும் கொஞ்சமும் கலங்காமல், ‘‘வாழ்வு முடிந்தால் முடியட்டும் – கொள்கைக்காக இந்த விலை’’ என்ற உணர்வுடன் இருந்தார். இந்தத் தகவலை அய்யா பெரியார் அவர்களே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்!
வரலாறு படைத்த
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!
சென்ற ஆண்டு வைக்கத்தில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசும், கேரள அரசும் ஒத்துழைப்புடன் இணைந்து, சரித்திரச் சின்னங்களைப் புதுப்பித்தும், பெரியார் சிலை, நூலகம், காட்சியகம், அரங்கம் புதிதாக இணைத்து, வரலாறு காணா விழா எடுத்தன.
மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகள், ஆணை கள்படி, வைக்கம் போராட்ட வெற்றி விழாக்கள் கேரள அரசால், அங்கே தொடங்கப்பட்டு, நிறைவு விழாவினை சென்னை பெரியார் திடலில் இரண்டு அரசு முதலமைச்சர்களும் நடத்தி, முத்தாய்ப்பாக வைக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரள் மாநாடாக, கோலாகல கொண்டாட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியை நமது முதலமைச்சரும், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும், ஏற்பாடு செய்து வரலாறு படைத்தனர்.
தந்தை பெரியாரின் ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான திட்ட நினைவகம்!
தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினை அழைத்து விழாவில், நம்முடைய தந்தை பெரியாருக்கு நன்றிக் காணிக்கை செய்தனர். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் சிறை வைக்கப்பட்ட, அருவிக்குத்தி – இன்று ஆறுக்குட்டி சிறையின் சிதிலமடைந்த பகுதியில் – கேரள அரசு ஒத்துழைப்புடன் – தமிழ்நாடு அரசுமூலம் 4 கோடி ரூபாய் செலவிட்டு புதிதாக நினைவகமாக எழுப்பிட முடிவு செய்து (ஏற்கெனவே தந்தை பெரியாரின் சிலைப் புத்தாக்கம், நூலகம், கண்காட்சியில் புதிய சேர்க்கை எல்லாம் நடந்தன என்றாலும்), சிறைப் பறவையான தந்தை பெரியாரின் ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான திட்ட நினைவகத்தை அமைக்க ஆணையிட்டார்.
பாராட்டு, நன்றிக்குரியவர்கள்!
வைக்கத்தில் இத்தனைப் பெரும் பணிகளை – போராட்ட வரலாற்றுப் பெருமைக்குரிய சின்னமாகப் புதுப்பிப்பு – புதிதாக அமைத்து – வெற்றிகரமான விழாவாக – நமது முதலமைச்சர் விருப்பத்தினை நேர்த்தி யான முறையில் நிறைவேற்றும், அரசும், அதிகாரிகளும், தமிழ்கூறும் நல்லுலகத்தின், திராவிடர் கழகத்தின் நிரந்தரப் பாராட்டுக்கு உரியவர்கள்!
மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சரான எ.வ.வேலு, செய்தி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிகாரிகள், அதுபோலவே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள அமைச்சர் சஜி செரியான், கேரள மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் அருவிக்குத்தியில் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில், எளிமையாகவும், மிகச்சிறப்புடன் நேற்று (26.9.2025) அந்நிகழ்வு நடைபெற்ற செய்தி கண்டு, பெரியார் தொண்டர்களும், பகுத்தறிவாளர்களும் பரவசப்பட்டு, தங்களின் பாராட்டை, நன்றியைத் தெரிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.
இது ஒரு வரலாற்று மைல்கல்லாகும்!
சில மாதங்களில், அப்பணி நிறைவுற்று, அவ்விழாவில் நாம் அனைவரும் பங்கேற்பது உறுதி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.9.2025