ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1:   கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல், பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை,  எங்கும் வெடிகுண்டு மிரட்டல் ஆகியவை இந்திய அளவில் அன்றாட செய்திகளாகிவிட்டதற்குக் காரணம் என்ன?

– மன்னை சித்து, மன்னார்குடி – 1.

பதில்:  இளைஞர்களை நல்வழிப்படுத்தியும், நேர்மையாகச் சம்பாதித்து ஒழுங்கான, ஒழுக்கமுள்ள வாழ்வை மேற்கொள்ளவும், பொது சமுதாய ஒழுக்கத் தகுதியுள்ளவர்களின் பிரச்சாரக் குறைவு. சமூக ஊடகங்கள் குறிப்பாக சினிமா, தொலைக்காட்சிகளால் திசை திருப்பல், வேலை கிட்டா நிலைமை, ஆடம்பர வாழ்க்கை வாழ குறுக்கு வழிகளை விரும்புதல், எந்த இழிவான தொழில்களையும் செய்திடத் துணியும் வரைமுறையற்ற போக்கு- இவை நாட்டில் மலிந்து விட்டன.

சமூக மேன்மைக்குத் தொண்டறம் புரிகின்ற பல அமைப்புகளும், அரசுகளும் மக்கள் அறிவியல் சிந்தனையோடு வாழ்வதற்குப் பகுத்தறிவைப் பரப்பிட வேண்டும் – பலன் தரும்.

கேள்வி 2: திராவிடர் கழகத்தின் புரட்சிகரமானச் செயலைப் பின்பற்றி, தற்போது கோவை மாவட்டம் அன்னூர் அருகே இறந்த மூதாட்டியின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண்களை   எப்படிப் பாராட்டலாம் ?      

– ச. சுமதி,  கோவை.

பதில்:  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பெற்றெடுத்த பெருவெற்றிக்கான கனி என்று பாராட்டலாம். பல ஊர்களில் தனித்துவமாகவே இது நடைபெற்று வருகிறது.  தென்காசியில் கூட சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று நடத்தப்பெற்றது.

கேள்வி 3:  வேலையில்லாத் திண்டாட் டத்துக்கும், வாக்குத் திருட்டுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவிமடுப்பார்களா?

 – இரா. கார்த்திகேயன், சிவகங்கை.

பதில்:  ராகுல் சொல்லும் எதனையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதே காவிக்கூட்டம். கடைசியில் அங்கே வந்து தான் நிற்பார்கள் –  சில ஆண்டுகள் கழித்து.

கேள்வி 4:  போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் குறும்படப் பிரச்சாரத்தை சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்னெடுத்திருப்பது போன்று, திராவிடர் கழக சார்பில் அது போன்றதொரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுமா?

– கி. சுகுந்தா, கிண்டி.

பதில்:  நம் பணி பலதுறைகளில் தேவை.  இதுபோன்றவைகளை ஆதரித்து, பாராட்டி உற்சாகப்படுத்துவோம். ஜாதி போதை, மதபோதை, மூடநம்பிக்கை, பக்தி போதை அதை விட ஆபத்து நிறைந்தவை என்பதால் அவற்றை அழித்தொழிப்பதிலேயே கவனம் அதிகம் இருக்க வேண்டும்.  மற்றவர்கள் இதைத் தொடவும் அஞ்சுவர்.

கேள்வி 5:  ஜி.எஸ்.டி. குறைப்பை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள் பல கோடிகளை சேமித்திருக்கலாமே? என்று  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பி இருப்பதற்கு  உரிய பதில் கிடைக்குமா?

 – ம. மோகன்,  கொளத்தூர்.

பதில்:  பீகார் தேர்தல் போன்ற பல மாநிலத் தேர்தல்கள் இப்போதுதானே வர இருக்கின்றன.

இரண்டாவது, வேலையில்லா திண்டாட்டத்தை திசை திருப்ப இது ஒரு  வழக்கமான முக்கிய உத்தி! (முன்னுதாரணங்கள் பல உண்டு)

கேள்வி 6:  எச்-1பி விசாவுக்கு அமெரிக்கா கெடுபிடி விதித்து இருக்கும் நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சீனா அழைப்பு விடுத்திருப்பதின் மூலம், நம் நாட்டுத் தொழிலாளர்களுக்கு விடியல் ஏற்படுமா?   

– அ. அப்துல்அகத்,  அய்தராபாத்.

பதில்:  சீனாவை நோக்கி இன்னும் 10 ஆண்டுகளில் உலக நாடுகள் நகருவது உறுதி!

சீனத்தின் விசா போன்றவற்றை முந்திச் சென்று பற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, முக்கியமாக நம்நாட்டின் இறையாண்மை (சுயமரியாதை) காப்பாற்றப்படும்.  அமெரிக்கா போன்ற நரிகளின் ‘பெரிய அண்ணத்தனம்’  தானே விலகும்.

கேள்வி 7:  தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக சென்னையில் நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி இந்தியாவின் வடமாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு  வழிகோலுமா? முன்னோட்டமாக அமைந்து ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மகுடம் சூட்டுமா?   

 – இ. இளங்கோவன்,  காஞ்சிபுரம்.

பதில்:  இரண்டும்தான்! ‘யாம்பெற்றப் பேரின்பம் வையகமும் பெற வேண்டும்’ என்பதே திராவிட இயக்கத்தின் திட்டவட்டமான மனித நேய உலகப் பார்வை ஆகும்.

கேள்வி 8: 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் விளைவாக நடப்பாண்டு  கிராமப்புற ஏழை-எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பது தந்தை பெரியார் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று பெருமிதம் அடையலாம் அல்லவா? 

 – க. காமராஜ்,  செய்யாறு.

பதில்:  கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே! பலே, பலே, பலே!!

கேள்வி 9:  தமிழ்நாடு அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துவது பற்றி?  

 – ம. தமிழ்ச்செல்வி,  தஞ்சாவூர்.

பதில்:  தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டுத் தடுத்து நிறுத்தி –  தீவிர தடுப்புச் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

கேள்வி 10:  குறுகிய அரசியல் பார்வையுடன் மும்மொழிக் கொள்கையைத் தி.மு.க. பிரச்சினையாக்குவதாக  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க. மீது குற்றம் சுமத்தியிருப்பது குறித்து?  

– கி. கோவிந்தராஜ்,  வந்தவாசி.

பதில்:  ‘உறவுக்கு கை கொடுப்போம்,  உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கலைஞர் கட்டளையை  சரியாக நிறைவேற்றிச் செயல்பட்டுள்ளது ‘திராவிட மாடல்’ அரசு. பாராட்டத்தக்கது!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *