பாலஸ்தீன பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது ஏன்? ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி

புதுடில்லி, செப். 26- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா ஆழ்ந்த அமைதி காப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குண்டு வீச்சில் சிக்கியும், பசி-பட்டினியில் சிக்கியும் பாலஸ்தீனத்தை அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மடிவது மனிதாபிமானம் கொண்ட அனைவரையும் உலுக்கி உள்ளது.

எனவே இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் அதிரடியாக குரல் கொடுத்து வருகின்றன. அத்துடன் இஸ்ரேலை பணிய வைப்பதற்காக பாலஸ்தீனத்தை தனி நாடாகவும் அங்கீகரித்து வருகின்றன.

சோனியா அழைப்பு

அந்தவகையில் இந்தியாவும் பாலஸ்தீன பிரச்சினையில் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவருமான சோனியா காந்தியும் அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக நாளி தழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் நிலைப்பாடு

பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தை கைவிடுவதாக உள்ளது.

இந்தியாவின் அரசமைப்பு மதிப்பீடுகள் அல்லது அதன் மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கும் இடையே யான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் முதன்மையாக இயக்கப்படுவதாகத் தெரிகிறது.

இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதைச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் சமீபத்திய மாதங்களில் மிகவும் வேதனையான மற்றும் அவமானகரமான வழிகளில் தோல்வியடைந்துள்ளன.

உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தனிநபரின் புகழ்பாடும் வகையிலோ, வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கவோ முடியாது. அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று தொடர்ச்சியின் உணர்வையும் கோருகிறது. இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீனத்துடனான அதன் பற்றின்மையை காட்டுகிறது.

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்து விட்டது. நீண்ட காலமாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நிறை வேற்றுவதற்கான முதல் படியாக இது உள்ளது.

193 அய்.நா.உறுப்புநாடுகளில் 150-க்கு மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ளன.

இந்தியா ஆதரவு

பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த இந்தியா, 1988 நவம்பர் 18-ந்தேதி பாலஸ்தீனத்தை நாடாக முறையாக  அங்கீகரித்து, இந்த விஷயத்தில் ஒரு தலைவராக இருந்தது.

இந்தியா நீண்ட காலமாக ஒரு நுட்பமான அதேநேரம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அமைதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகளுக்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில் பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு சோனியா காந்தி அந்த கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *