பீஜிங், செப்.25- அய்.நா. பொதுமன்றக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கூறினார்.
அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது:-
அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. சீன நிறுவனங்களுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன.
அந்த நிறுவனங்கள் எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை. ஆகவே, ரஷ்யாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம்.
உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.