லக்னோ, செப்.25 உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக சீதாப்பூரில் உள்ள கல்வி அதிகாரி விளக்கம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் சீதாப்பூர் வந்த பிரிஜேந்திர குமார், கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில் அகிலேஷ் பிரதாப் அதிருப்தி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரிஜேந்திர குமார், தனது பேன்ட் பெல்ட்டால் அகிலேஷ் பிரதாப்பை பல முறை தாக்கினார். சக ஊழியர்கள் ஓடிவந்து, பிரிஜேந்திர குமாரை அப்புறப்படுத்தினர்.
பிரிஜேந்திர குமார், பதில் சொல்ல முடியாத போது தன்னை திட்டியதாகவும் பிறகு ஆத்திரம் அடைந்து பெல்ட்டால் தாக்கியதாகவும் கல்வி அதிகாரி கூறினார். இது தொடர்பாக சீதாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரிஜேந்திர குமாரை கைது செய்தனர். இதற்கிடையில் கல்வி அதிகாரியை தலைமை ஆசிரியர் பெல்ட்டால் தாக்கும் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதான் மத சார்பற்ற ஆட்சியா?
11 நாள்களுக்கு இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடையாம்
போபால், செப்.25 11 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, வட மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். அதிலும் குஜராத், உத்தரப் பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெறும் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா 22-9-2025 அன்று தொடங்கியுள்ளது. இந்த விழா, அக்டோபர் 2ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், நவராத்திரி விழாவின் போது இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிப்பதாக போபால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து போபால் துணைப் பிரிவு நீதிபதி திவ்யா படேல் தெரிவித்துள்ளதாவது, ‘நவராத்திரி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும். இதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த நகரில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், குருகிராமில் விஸ்வ இந்து பரிஷத் நவராத்திரியின் போது அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளையும் மூடக் கோரி துணை ஆணையரிடம் விண்ணப்பித்துள்ளது. கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள கடைகள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல கடைகள் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாகவும், இதனால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள்
11 பேர் விடுதலை
ராமேஸ்வரம், செப்.25 எல்லை தாண்டிய மீன்பிடித்த புகாரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்க வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறை காவலில் வைத்தனர். இந்த நிலையில், நேற்று (24.9.2025) அவர்களுடைய சிறை காவல் முடிந்து ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனை இன்றி விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகள் நட அரசு திட்டம்
சென்னை, செப்.25 தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நீர்நிலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் நட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ‘உதவி செயலி’ (udhavi.app/panai) மூலம் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து செயலர்கள், மாணவர்கள் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 44 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளன. 12,620 பஞ்சாயத்துகளில் தலா 5,000 பனை விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ளது.