லக்னோ, செப்.24 தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இந்த கருத்தரங்கு நேற்று (23.9.2025) நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் உ.பி. முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,
கி.பி.1100ஆம் ஆண்டுவாக்கில் இஸ்லாம் இந்தியாவை தாக்கியபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது. ஆனால், 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்தது. 900 ஆண்டுகளில் இந்து மதத்தினரின் மக்கள் தொகை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், 60 கோடியில் இருந்த மக்கள் தொகை 30 கோடியாக சரிந்துள்ளது. இந்து மதத்தினரின் மக்கள் தொகை இந்தியா மீது படையெடுத்தவர்களின் அட்டூழியங்களால் குறைந்தது. அதுமட்டுமின்றி வறுமை, நோய், பிற சித்ரவதைகளால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது. அந்நிய அடிமைத்தனம் இதைத்தான் செய்தது. அதுதான் இந்த நாட்டில் நடந்தது என்றார்.
பன்னாட்டு விண்வெளி மய்யத்தை செவ்வாய்க் கோளில் அமைக்க வாய்ப்பு
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
திருச்சி, செப்.24 ‘பன்னாட்டு விண்வெளி மய்யத்தை செவ்வாய்க் கோளில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனிதர்கள் வாழத் தகுதியான கோள்: கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் நாம் செல்லமுடியும். உலக அளவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதை கல்வி யின் மூலம் அடைய முடியும் என்பதை என்னை உதாரணமாக வைத்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
சமுதாயத்துக்கான பல்வேறு பணிகளை இந்திய விண்வெளித் துறை செய்துள்ளது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்து மனிதர்கள் வாழத் தகுதியான கோளாக செவ்வாய்க் கோள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பன்னாட்டு விண்வெளி மய்யத்தை செவ்வாய்க் கோளில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பழைய காலத்திலும் அறிவியல் இருந்தது. இன்றும் உள்ளது. ஆனால், அறிவியல் இன்று பல வகைகளில் மேம்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு விண்வெளித் துறையில் முக்கியமானது. விண்வெளித் துறையில் ஏற்கெனவே அது செயல்படுத்தப்பட்டு அடுத்த பரிமாணத்தை நோக்கிச் சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.