நரேந்திர மோடி ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்த பிறகு நாட்டை அப்படியே தூக்கி நிறுத்தி விட்டார் என்று பார்ப்பன – பனியா ஊடகங்கள், சொல்லி வைத்தாற்போல குழுப் பாட்டுப் பாடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி கொடுத்தாரே என்று கேட்டால் ‘பக்கோடா’ விற்பதுகூட வேலை வாய்ப்புதான் என்று மக்களை எடுத்தெறிந்து பேசினார் பிரதமர்.
‘ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம்’ என்று கூறினாரே மோடிஜி ‘அது என்னாயிற்று?’ என்று கேட்டால் அதெல்லாம் வெறும் – ‘ஜும்லா’ என்று மக்களை ஏமாற்றும் மோசடித்தனத்தை என்னவென்று சொல்லுவது!
உள்நாட்டில்தான் இவர்கள் விலை போகவில்லை யென்றால் வெளிநாட்டுக் கொள்கையிலும் படுதோல்வியே!
lஇந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 50% வரை வரி விதித்துள்ளது. இதனால், இந்திய ஏற்று மதியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு – மக்கள் தலையில் பாரமானது.
l அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை அமெரிக்கா மீது வரிகளை விதித்துள்ள “மோசமான நாடுகளில்” ஒன்றாகப் பட்டியலிட்டார். குறிப்பாக இதுவரை எந்த ஒரு நாடும் இந்தியாவை போதைப்பொருட்கள் கையாளும் நாடுகளின் பட்டியலில் சேர்த்ததில்லை. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா இந்தியாவை போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இணைத்து இந்தியாவை உலக நாடுகளின் பார்வையில் அவமானப்படுத்தி உள்ளார்
l அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கைது செய்யப்பட்ட இந்தியர்கள், கைவிலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஆனால் சீனர்கள், ரஷ்யர்கள் உள்ளிட்ட அமெரிக்க பகைநாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் மீது கை ைவக்க அஞ்சிய அமெரிக்க அரசு இந்தியர்களை – பெண்கள், குழந்தைகள் என பலரை கை கால்களில் விலங்கிட்டு அனுப்பியுள்ளது – மோடி அரசின் பலவீனமான நிர்வாகத்தைக் காட்டுகிறது.
l இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
lவெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், எச் 1பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த அறிவிப்பால், அமேசான், டாடா கன்சல்டன்சி, மைக்ரோசாஃப்ட், மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு எந்தவிதமான உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்திய வெளியுறவுத் துறை, “இது குறித்து ஆய்வு செய்வோம்” என்று மட்டுமே கூறியுள்ளது. மேலும், “இரு நாட்டு மக்கள் தொடர்பு முக்கியமானது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவகுரு என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் பிரதமர் மோடியின் பிம்பம், உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பலவீனமடைந்துவிட்டது என்பதை அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடுகள் காட்டுகின்றன. மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று விமர்சித்த மோடியின் வெளியுறவுக் கொள்கை, இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட கடந்த தேர்தலில் பிஜேபிக்கு வாக்குகள் குறைந்தன. 2019 தேர் தலில் 303 மக்களவை உறுப்பினர்களைப் பெற்ற பிஜேபி 2024 தேர்தலில் 240 இடங்களை மட்டுமே பெற்றது.
தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் பீகாரையும், ஆந்திராவையும் நம்பி ஆட்சியை நகர்த்தும் பரிதாப நிலைதான்!
நிகர லாப – நட்டத்தைக் கூட்டிக் கழித்தால் பிஜேபி உள்நாட்டிலும் தோல்வி, வெளிநாட்டுக் கொள்கையிலும் படுதோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
உலகத்தை சதா சுற்றிக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது. வெளிநாட்டுக் கொள்கையிலும் வெற்றியை ஈட்ட வேண்டும் – அதுதான் நல்லாட்சி என்பதற்கான இலக்கணம்!
பிஜேபி இதைப் புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாதது போல பாவனை செய்யும். நாட்டு மக்கள் நம்மை ஆளும் பிஜேபி ஆட்சி எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டு, வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்.