புதுடில்லி, செப்.23- வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு 30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் திருத்தப்பணி
பீகாரில் ‘எஸ்.அய்.ஆர்.’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணியின் மூலம் பீகாரில் இருந்த 7.24 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இது வாக்குத் திருட்டு என்று குற்றஞ்சாட்டியதுடன் பீகாரில் வாக்காளர் அதிகார நடைப் பயணத்தையும் நடத்தினார்.
நாடு முழுவதும்…
பீகாரில் நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு 30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அவரவர் மாநிலங்களில் கடைசியாக நடந்த திருத்தப்பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாராக வைத்திருக்குமாறும் கூறியுள்ளது. எனவே, அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில் இப்பணி தொடங்கும் என்று தெரிகிறது.