புதுடில்லி, செப்.23 வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நவ ராத்திரி விழா நேற்று (22.9.2025) தொடங்கியது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை விழா நடை பெறுகிறது.
குஜராத், மகாராட்டிரா உள்ளிட்ட பல வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் நவராத்திரி விழாக்களின் போது “கர்பா” நடனம் ஆடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில், இந்த “கர்பா” நடன நிகழ்வுகளில் இந்துக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில்,“நவராத்திரியின் போது நடைபெறும் கர்பா நடன நிகழ்வுகளில் “லவ் ஜிஹாத்” (இந்து – முஸ்லிம் திருமணம்) அதிகமாக நிகழ்கிறது. இதனைத் தடுக்க இந்துக்கள் மட்டும் தான் பங்கேற்கிறார்களா? என்பதைக் கண்டுபிடிக்க, நடன நிகழ்வுகளின் போது ஆதார் அட்டைகள் மூலம் பங்கேற்பாளர்களின் அடையா ளங்களை சரிபார்க்க வேண்டும்” என விஎச்பி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுக் கட்சி கேள்வி
இந்நிலையில், இந்துக்கள் அல்லாதவர்கள் கர்பா நடனம் ஆடக் கூடாது என்று கூற விஎச்பி யார்? என பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராம் தாஸ் அத்வாலே எம்.பி., கூறுகையில், “இந்துக்கள் அல்லாதவர்கள் கர்பா நடனம் ஆடக் கூடாது என அறிக்கை விடுப்பது வன்முறையை அழைப்பதற்குச் சமம் ஆகும். யார் கர்பா நடனத்திற்குச் செல்ல வேண்டும், யார் செல்லக் கூடாது என்பதை முடிவு செய்ய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு என்ன உரிமை உள்ளது? அவர்கள் யார்? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அறிவிப்புகள் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத் தன்மை மற்றும் மத சகிப்புத் தன்மையின் மய்யத்தையே குறை மதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
குறிப்பாக விஎச்பியின் இந்த அறிவிப்பு வன்முறையைத் தூண்டி சில பயங்கரவாதச் சக்திகளுக்கு ஒரு திறந்த அழைப்பாக மாறும். அதனால் நவராத்திரியின் போது நாட்டில் மோதல்கள், தாக்குதல்கள் அல்லது மத மோதல்கள் ஏற்பட்டால் விஎச்பி மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளே (இந்துத்துவா) முழு பொறுப்பாகும். ஒரு பண்டிகையை யார் கொண்டாட வேண்டும் என்பதை எந்த அமைப்பும் தீர்மானிக்க முடியாது என்பதால், விஎச்பி அறிக்கையை கண்டுகொள்ளாமல், அனைத்து மக்களும் கர்பா நடனத்தை வெறும் கலாச்சார அல்லது நடன நிகழ்வாகக் கருத வேண்டாம்.
கர்பா ஒரு மத பாரம்பரியம் மட்டுமல்ல, இசை, நடனம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கொண்டாட்டமும் கூட. ஒரு சித்தாந்தத்துடன் அதை ஏகபோகமாக்க முயற்சிப்பது நியாயமற்றது மற்றும் பிற்போக்குத்தனமானது” என தனது டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.