புதுடில்லி, செப்.23 ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இன்று(செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி 21.9.2025 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்தில் ஜிஎஸ்டி சேமிப்பு விழா தொடங்கும் என்று தெரிவித்தார்.
மோடியின் உரையை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் எளிமையான மற்றும் திறமையான GST-க்கு பதிலாக, உங்கள் அரசாங்கம் ஒன்பது தனித்தனி அடுக்குகளைக் கொண்ட “கப்பர் சிங் வரி”யை விதித்தது, 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்போது, நீங்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றிப் பேசுகிறீர்கள். பொதுமக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய பேண்ட்-ஏய்டைப் போடுகிறீர்கள்!
பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், பென்சில்கள், புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என அனைத்திற்கும் நீங்கள் GST விதித்ததை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
உங்கள் அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பு அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலால் ஜிஎஸ்டி அமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு பிரதமர் முழு உரிமை கோரினார்.
ஜூலை 2017 முதல் நாங்கள் ஜிஎஸ்டி 2.0 அய் கோரி வருகிறோம். 2024 மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் இது ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.
தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல. வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) கவலைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை.
மின்சாரம், மதுபானம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் அய்ந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வணிகங்கள் அச்சத்தினாலும், ஒருசிலரின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் தாமதமான இந்த ஜி.எஸ்.டி. மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்மையில் உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.