மதுரை, செப்.23- கீழடி மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளை மகாபாரதத்துடன் சம்பந்தமே இல்லாமல் தொடர்புபடுத்தும் சூழ்ச்சி நடக்கிறது என்றும், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு நிகழும் இத்தகைய சம்பவங்கள் தான் சந்தேகத்திற்குரியவை என, ஒன்றிய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியி ருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்தரங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம், மதுரை விராட்டிபத்து அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 20.9.2025 அன்று நடைபெற்றது. தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
‘சிந்து+வைகை x சரஸ்வதி’ என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணன், ‘தோண்டியதும் தோண்டாததும்’ என்ற தலைப்பில் இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் உரையாற்றினர்.
கதைகள் வரலாறாக மாற்றம்:
அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியபோது, ‘நாகரி கங்கள் என்பவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எந்த நாகரிகத்தையும் படைக்கவில்லை. அப்படி மனிதர்கள் உருவாக்கிய நாகரிகத்தை, புனைவுகளால் கட்டமைத்து கதைகளை வரலாறாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை மறுதலிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட வேண்டும். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் என்னிடம் விவாதத்திற்கு வந்தவர்கள் உண்டு.
மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி கட்டுரை:
மகாபாரதத்தில் பாண்டிய மன்னன் பற்றிய குறிப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். கீழடி முதல் இரண்டுகட்ட அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாக அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த சில ஆய்வு மாணவர்கள் ‘மணலூர் கீழடி மகாபாரதம்’ என கீழடியோடு, மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்கள்.
கீழடி அகழாய்வு அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் சூழலில், அதற்கு முன்னால் ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது என்பதைதான், நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதை கண்டிப்பாக நாம் முறியடித்தாக வேண்டும் என்றார்.