ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மிகச் சூழ்ச்சிகரமாகத் திட்டமிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்குள் தனது அரசியல்-பண்பாட்டு திணிப்புகளை அரங்கேற்றி வருகிறது. இதன் மிகத் தெளிவான உதாரணமாக, 20.09.2025 அன்று முதல் 22.09.2025 வரை சென்னை இந்திய அறிவியல் தொழில் நுட்ப நிறுவன (அய்அய்டி) வளாகத்தில் “விக்சித் பாரத்” (வளர்ச்சி அடைந்த இந்தியா) திட்டத்தின் கீழ் “தேசிய மறுமலர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவும் தொழில் முனைவும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெறுகிறது. இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இது பாஜக-ஆர்.எஸ்.எஸ் இணைந்த முயற்சி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அய்அய்டி இயக்குநர் வி.காமகோடி இந்தப் பயிலரங்கத்தை முன்னெடுக்கிறார். பங்கேற்கும் முக்கியப் பேச்சாளர்களில் சித்தார்த் வரதராஜன், துக்ளக் குருமூர்த்தி, சாமியார் மித்ரானந்தா மற்றும் ஸநாதன தர்மத்தை (இந்துத்துவக் கொள்கையை) போற்றும் பல அரசியல் சார்ந்த பேச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் இந்துத்துவ அஜெண்டாவை முன்னிறுத்துபவர்கள் என்பது உலகறிந்த ஒன்றே! (பக்கத்தில் படத்துடன் பட்டியலைக் காண்க) குறிப்பாக, துக்ளக் குருமூர்த்திக்கும் – அய்அய்டி போன்ற அறிவியல் நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் அரசியல் விமர்சகராக இருந்தாலும், இன்று பாஜகவின் ‘விக்சித் பாரத்’ போன்ற திட்டங்களில் அவரது பங்கு, இந்துத்துவ சிந்தனையை அறிவியல் மாணவர்களிடம் ஊன்ற வைக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது.
இந்தப் பயிலரங்கத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் (அய்அய்எஸ்.சி), அய்அய்டி சென்னை உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து ஆய்வு மாணவர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர். இது வெறும் தொழில் முனைவு பயிலரங்கம் போல் தோற்றமளித்தாலும், உண்மையில் இந்துத்துவ நச்சு விதைகளை இளைஞர்களின் மனதில் ஊன்ற வைக்கும் ஒரு தந்திரமான முயற்சி என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “அரசியல்-பண்பாட்டுத் திணிப்புகள்” என்று ஆர்.எஸ்.எஸ். தன்னை வெளிப்படுத்தாமல், ‘தேசிய மறுமலர்ச்சி’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) போன்ற நவீன தொழில்நுட்பங்களை இந்துத்துவக் கொள்கையுடன் இணைத்து வழங்குகிறது. இதன் மூலம், போலி அறிவியல் – ஸநாதன தர்மத்தின் ‘ஆன்மிக அறிவியல்’ போன்றவற்றை – அறிவியல் மாணவர்களிடம் பரப்புவதற்கு வழி வகுக்கப்படுகிறது.
பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி, கல்வி நிறுவனங்களை ‘ஸநாதன தர்ம’ சார்ந்த இந்துத்துவ கொள்கை ஆதிக்கம் செலுத்தும் இடங்களாக மாற்ற முயல்கிறது. இது அய்அய்டி, அய்அய்எஸ்.சி போன்ற அறிவியல் நிறுவனங்களை அரசியல் கருவியாக்கி, இளைஞர்களின் சிந்தனையை மதவாதத் திசையில் திருப்பும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, கல்வி சீர்கேடு ஏற்படும்; அறிவியல் அடிப்படையிலான சிந்தனைக்குப் பதிலாக, மதவாதிகளின் போலிக் கோட்பாடுகளை மாணவர்களிடம் வெறித்தனமாக ஊன்றும்.
மாணவர்களை உயர்கல்வி பயில அனுப்பி வைத்தது எதற்காக? அவர்கள் மூளையில் பழைய பாசி பிடித்த இந்துத்துவ குப்பைகளைக் கொட்டுவதற்கா? ஆர்.எஸ்.எஸ். மதவெறி சித்தாந்தங்களைக் கற்பித்து, அவர்களின் அமைப்புக்கு ஆள் பிடிக்கவா?
பெற்றோர்கள் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனரல்லாத மாணவர்கள், ஆசிரியர்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை!
இதுகுறித்து சமூக அரசியல் அமைப்புகளும் கண்டனக் குரலை உயர்த்த வேண்டும்.
அடுத்த தலைமுறை ஆர்.எஸ்.எஸ். பிடியில் சிக்கினால் நாடு தாங்காது எச்சரிக்கை!
அய்.அய்.டி. நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் பட்டியலைக் காணீ ர்!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனியார் நிறுவன இயக்குநர் சிறீதர் வேம்பு, துக்ளக் எடிட்டர் குரு மூர்த்தி, தனியார் நிறுவன சேர்மேன் வெங்கட்ராம ராஜா, சாமியார் மிருத்யானந்தா, ஆரிய வைத்தியசாலை மேலாண் இயக்குநர் தேவிதாஸ்வாரியர், ஏபிவிபி மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் ஆசிஸ் சவுகான், அய்.அய்.டி இயக்குநர் காமகோடி.