வழக்குரைஞர்
சு. குமாரதேவன்
திராவிட இயக்கத்தின் இராமாயண எதிர்ப்பு: திராவிட இயக்கத் தின் பெருந்தலைவர்களான தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் க. அன்பழகன், குத்தூசி குருசாமி, கைவல்ய சாமியார், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இராமயணத்தின் கேடுகளை தமிழக மக்களுக்கு புரியும்படி எடுத்துரைத்து வால்மீகி இராமயணம் என்பது வேறு, கம்பராமாயணம் என்பது வேறு. வால்மீகி இராமயணம் இயற்றிய வால்மீகி அதில் குறிப்பிட்டுள்ள அறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கதைகளை அல்லது ஏற்றுக்கொள்ள இயலாத சில நிகழ்வுகளை அல்லது இப்படிதான் நடந்திருக்கும் என்று வால்மீகியின் கற்பனைக்கு எல்லை இல்லாமல் இடம் பெற்றிருந்த சில சம்பவங்களை, கம்பர் தன்னுடைய இராம காதையில் மாற்றி எழுதியுள்ளார் என்றும், வால்மீகி எழுதிய இராமயணத்தின் பெரும் பகுதியினைத் தனக்கிருந்த தமிழறிவின் மூலம் இட்டுக்கட்டி மயக்கும் சொற்களைப் போட்டு, மாற்றிக் காட்டி தமிழ் மக்கள் கம்பராமாயணத்தை ஏற்றிப் போற்றும் வகையில் செய்தது கம்பனின் திறமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், அந்த கற்பனைத் திறனின் ஆபத்து தமிழினத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருப்பதோடு நம் தமிழக மக்கள் ஆரிய தாசர்களாக மாறுவதற்கும் கம்பனின் இராமயணத்தினை ஒரு கதாபாத்திரமாக பார்க்காமல் கடவுளாகப் பார்த்து அதற்குப் பூஜை, வந்தனை செய்வதற்கு ஏற்றாற்போல உருவாக்கி மகிழ்ந்ததற்கு கம்பன் காரணமாக இருந்தார். வடநாட்டு வால்மீகியும் தமிழகத்தில் கம்பனும் தூக்கிப் பிடித்த இராமன் இன்று இந்தியாவில் கலவர இராமனாக உருவெடுத்திருக்கிறார்கள். அன்றைக்கே தந்தை பெரியாரும் பேராசிரியர் அண்ணாவும் சுட்டிக்காட்டி எச்சரித்தார்கள். தந்தை பெரியார் இராமாயண பாத்திரங்கள் என்று ஒரு நூலை சமஸ்கிருதப் பண்டிதர்களின் உரையினை மேற்கோள் காட்டி கம்பனின் கவிதை பொய்மை நிறைந்தது என்று எடுத்துக்காட்டினார். தமிழர்கள் மூளையில் படிந்திருந்த ராமன் என்னும் கதை நம் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என்று தந்தை பெரியார் சுட்டிக்காட்டினார். 1956-ஆம் ஆண்டு ‘இராமன் பட எரிப்பு’ என்ற போராட்டத்தை நடத்தினார். 1966-ஆம் ஆண்டு இராமயண எரிப்பு போராட்டம் நடந்து கம்பராமாயணத்தை பொசுக்கி அதன் மூலம் தமிழர்களின் மூளையில் போடப்பட்ட விலங்கான இராமாயணத்தை அதிலிருந்து விடுவிக்க மிகப்பெரும் முயற்சியினை மேற்கொண்டார். தந்தை பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 1974 டிசம்பர் 24-ம் தேதியன்று வடநாட்டில் எவ்வாறு இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகிய கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றதோ அவ்வாறு இராமன், சீதை, லட்சுமணன் ஆகி யோரின் கொடும் பாவிகளைச் சென்னை பெரியார் திடலில் எரித்து இயக்கத்தின் இராமாயண எதிர்ப் பினை அன்னை மணியம்மையார் தீவிரப்படுத்தினார். கம்பராமாயணச் சொற் பொழிவு நடைபெறும் காரைக்குடியில் ‘இராமாயண எதிர்ப்பு’ மாநாட்டினை ஆசிரியர் கி.வீரமணி பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். சென்னையிலும் அதேபோல மாநாடு நடத்தப்பட்டது. இராவண காவியம் தொடர் சொற்பொழி வினை மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், புலவர் வெற்றியழகன் ஆகியோர் ஆற்றினர். இன்றைய இராமாயண எதிர்ப்பு நீர்த்துப்போகாமல் இருக்க திராவிடர் கழகத்தின் பேச்சாளர்கள் இராமாயணப் புரட்டினை அந்த சொற்பொழிவுகளின் மூலம் எடுத்தியம்பிக் கொண்டுதான் வருகிறார்கள். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு’ என்றதொரு அற்புதமான நூலினை எழுதியுள்ளார். தொடர் சொற்பொழிவுகள் மூலம் ஆசிரியர் கி. வீரமணி இராமாயணப் புரட்டினை ஆதாரங்களுடன் உடைத்தெறிந்தார். அது இன்னும் தொடர்கிறது.
இராமாயணம் கட்டுக் கதைக் என்றால் இராவண காவியமும் கட்டுக் கதை தானே?
இராமாயணம் ஒரு கட்டுக் கதை என்று திராவிட இயக்கத்தவர் கூறுவதற்கு முன்பே பல ஆய்வாளர்கள், அறிஞர்கள் இராமயணம் பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்து சொன்னார்கள். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் என்ற பெயர் கொண்ட புலவர் முதல் மேனாள் இந்தியத் தலைமை அமைச்சர் பண்டித நேரு வரை பல்வேறு அறிஞர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதத்தை நன்கு கற்று இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்று தனது ஆராய்ச்சியின் மூலம் எடுத்துரைத்தார். ‘வால்மீகியின் வாய்மையும், கம்பனின் புளுகும்”” என்ற நூல் வால்மீகி இராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வித்தியாசத்தினை மிக அருமையாக உணர்த்தும் ஒன்றாகும். இந்த நூலினை எழுதிய பா.வே. மாணிக்க நாயக்கர், தீ பரவட்டும், நீதிதேவன் மயக்கம், கம்பரசம் போன்ற நூல்களை எழுதிய அறிஞர் அண்ணா ஆகியோர் இராமாயணத்தின் உண்மைத் தன்மையினை உலகுக்கு உரைத்தார்கள். இராமாயணம் கட்டுக் கதை; அப்படியானால் இராவண காவியமும் கட்டு கதை தானே!’ என்று அண்ணாவைக் கேட்டதற்கு அண்ணா கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்:-
இராமனும் இராவணனும் – உண்மை உருவங்களா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர் – மதிப்பர் – வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.””
இராவண காவியம் தோற்றம் கொண்டது எதற்காக?
இராவண காவியம் தோன்றியது எதற்கு? இராவண காவியம் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட ஒன்று. ‘பாவண மல்குமி ராவண காவியம்’ என்று புரட்சிக் கவிஞர் தனது சிறப்புப் பாயிரத்தின் முதலாவது அடியினைக் கூறியுள்ளார். 1946-ஆம் ஆண்டு புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம், அன்றைய காங்கிரஸ் அரசினால் 02.06.1948 அன்று தடை செய்யப்பட்டது. அந்தத் தடையினை எதிர்த்து பல்வேறு எழுத்தாளர்கள் எழுதியும், பேசியும் வந்தார்கள். 1971-ஆம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி தான் இராவண காவியத்திற்கான தடை தமிழ்நாடு முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களால் நீக்கப்பட்டது. இராவண காவியம் எதற்கு என்பதற்கு 19-ம் பக்கத்தில் புலவர் குழந்தை விளக்கமாக ஓர் ஆராய்ச்சி உரையினை எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை கீழே பார்க்கலாம்:-
‘இராவண காவியம் எதற்கு?’ என்ற இக்கேள்வி யாரால், எப்போது, ஏன் கேட்கப்பட்டது? பழந் தமிழராகிய நம் முன்னையோர் ஒழுக்க முறைகளை நாமும் அறிந்து கொள்வதற்காகப் பேரிலக்கண நூல் – தொல்காப்பியம் – செய்து வைத்த தொல்காப்பியர் இருக்க, தமிழர் வாழ்க்கைச் சட்டநூலும் உலகப் பொதுநூலுமான ஒப்புயர்வற்ற திருக்குறளை நமக்குத் தந்த வள்ளுவர் இருக்க, பழந்தமிழ் மக்களின் அகம்புற வாழ்வை அருந்தமிழ்ப் பாக்களால் வகைபெற அமைத்துக் கொடுத்த பன்னூற்றுக் கணக்கான சங்கப் புலவர்களிருக்க, கற்றார் கல்லாதார் ஆகிய எல்லாத் தமிழ்மக்கட்கும் அறிமுகமானவரான ஔவையார் இருக்க, இமயமுதல் குமரிவரை ஒரு மொழி வைத்தாண்ட தமிழர் பெருமைக்கோர் அகச்சான்றாக உள்ள சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோவடிகள் இருக்க, இன்னும் எத்தனையெத்தனையோ செந்தமிழ்ப் புலவர்களிருக்க, அவர்களுக்கெல்லாம் திருநாட்களில்லை, பெருநாட் களில்லை, கொண்டாட்டமில்லை, மாநாடுகளில்லை. அவர்களிற் பலர் பெயரினைக்கூடத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில்லை; அறியவும் விடுவதில்லை. ஆனால், அப்புலவர்களிலொருவரான கம்பருக்கு மட்டும் திருநாளும் பெருநாளும் கொண்டாடப்பட்டு வருகின்றன; ஆண்டுதோறும் பல இடங்களில் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. ஏன்?
அங்கேதான் இருக்கிறது நுட்பம். அது ஒரு தந்திரம் என்றுங் கூடச் சொல்லலாம். அது ஒரு கூட்டத்தாரின் தன்னலமென்பதே பொருத்தமானதாகும். எங்ஙனம்? மேல் எடுத்துக்காட்டிய புலவர் பெரு மக்களெல்லாரும் தமிழர் வாழ்வுக்காக, தம் இனப்பெருமைக்காகத் தம் தமிழ்ப்புலமையைப் பயன்படுத்தினர். கம்பரோ, தமிழர் வீழ்வுக்காக, தமிழினப் பகைவரான ஆரியர் வாழ்வுக்காகத் தம் தமிழ்ப் புலமையினை, தம் தமிழ்க் கவித்திறத்தினைப் பயன்படுத்தினார்; தமிழினத்தை ஆரியத்துக்கு, ஆரியர்க்கு அடிமையாக்கத் தமது தமிழ்க் கவித்திறத்தினைப் பயன்படுத்தினார்; அதற்கு தம் தமிழ்க் கவித்திறத்தினைக் கருவியாகக் கொண்டார் எனலாம்.
‘பெண் கொலைக்கு அஞ்சா ராமன் அறக்கொடியோன்’ என்பதைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்வதற்கும் வாலி, சுக்ரீவன் மனைவியை கவர்ந்துக்கொண்டு அவனை ஊரை விட்டோட்டினான் என்றது வாலி மேல் வேண்டுமென்றே சுமத்தப்பட்ட அடாப்பழி ஆகும் என்பதைத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தவேயாகும் என்றும், அனுமனின் இரண்டகச் செயலினைத் தமிழக மக்களுக்கு அறிவுறுத்தி அனுமன் போன்ற காட்டிக் கொடுக்கும் கயவர்களை போற்றும் ஏமாளித்தனத்தை போக்குவதற்கும்,
‘கம்பன் கவிநயத்தில், கற்பனைத் திறத்தில், கலைச் சிறப்பில், காவியச் சுவையில் கட்டுண்டு, ஆரியச் சேற்றில் அழுந்திக்கிடக்கும் தமிழ் ரசிக மணிகளைத் தட்டி யெழுப்பித் தனித் தமிழுலகில் உலவச் செய்து, பழந்தமிழகத்தின் இயற்கை வளத்தினை, இன்ப வாழ்வினை, இயல் நெறி முறையினை இனிது கண்டு களிக்கும் படி செய்யவே இராவண காவியம் செய்யப்பட்டது.’ என்று புலவர் குழந்தை குறிப் பிட்டுள்ளார்.
இராவண காவியத்தின் மாட்சி: இராவண காவியம் மொத்தம் 3100 பாடல்களை கொண்டதாக விளங்குகிறது. தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் ஆகிய 5 காண்டங்களில் 57 படலங்கள் கொண்டு விளங்குகிறது. 1906-ஆம் ஆண்டு ஓலவலசு என்னும் சிற்றூரில் பிறந்த புலவர் குழந்தை, தன் இனம் வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றவர். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகயும் தலைமை ஆசிரிய ராகவும் பணிபுரிந்தவர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்ட புலவர் குழந்தை, 1930-ஆம் ஆண்டு ஞான சூரியன் என்ற நூலினை எழுதிய சிவானந்த சரஸ்வதியுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் 4 நாட்கள் வாதிட்டு கடவுள் இல்லை என்ற தனது கொள்கையை நிலை நாட்டினார். புலவர் குழந்தையின் இராவண காவியத்தினை ஆழ்ந்து படித்த அவர் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களில் ஒருவரான புலவர் அய்யம்பெருமாள் ‘இனி ஒரு கம்பன் வருவானா இப்படியும் கவி தருவானா என்றிருந்தேன்’ கம்பன் வந்தான் கவியும் தந்தான். ஆனால் கருத்து தான் மாறுபட்டது என்று பாராட்டினார். திருக்குறள், கம்பராமாயணம், பெரியபுராணம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் உலகு என்று தொடங்குவதும் முடிவதுமாக இருக்கிறது. அதை அப்படியே பின்பற்றி நமது புலவர் குழந்தை கீழ்க்கண்டவாறு உலகு என்று தொடங்கும் பாடலை முதன்மையாக போட்டு ஆரம்பித்துள்ளார்.
அதேபோல இறுதியாக காப்பியத்தை முடிக்கும்போது வாழ்க என்று முடிப்பது இலக்கியத்தில் இயல்பான ஒன்றாகும். அதை வழுவாமல் இறுதிப்பாடலாக
‘வாழ்கதாழ் வுயர்வில் லாத்தனித் தமிழர்
வழங்குசெந் தமிழ்மொழி வாழ்க’
என்ற பாடலை இயற்றியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சி முன்னுரை: 1946-ஆம் ஆண்டு தனது பிறந்த நாள் அன்று பேரறிஞர் அண்ணா ஓர் அருமையான ஆராய்ச்சி முன்னுரை ஒன்றினை இராவண காவியத்திற்கு எழுதியிருக்கிறார். அதில் கதிரவன் தோற்றம், மறைவு ஆகியவற்றை கம்பர் தனது இராமாயணத்தில் குறிப்பிட்டதையும் புலவர் குழந்தை இராவண காவியத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஒப்பிட்டு இராவண காவியம் தமிழின் இனிமை கண்டு சொக்குவோர்க்கு விருந்தாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேரறிஞர் அண்ணா குறிப்பிடும்போது, இந்நூல், பழமைக்குப் பயணச் சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், காவியச்சுவை யறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும் நுண்ணிய புலமையும் இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்; தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு; காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறை கூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.”
டாக்டர் கலைஞரின் ஆராய்ச்சி அணிந்துரை: 17.05.1971-ஆம் ஆண்டு இராவண காவியத்திற்கான தடையினை நீக்கியவுடன் 14.09.1971 அன்று இரண்டாவது பதிப்பாக மீண்டும் இராவண காவியம் வெளியிடும்போது மிகச்சிறந்த ஆராய்ச்சி அணிந்துரை யினை மிக நேர்த்தியாக படிப்போர் இராவண காவியத்தை ஒரு முறை யாவது படித்துனரும் வகையிலே பல்வேறு பாடல்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்!
நூலின் பெருமையைக் குறித்து டாக்டர் கலைஞர் கூறும்போது
“நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால் இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம். வையகத்திற்கு வாழ்நெறியுணர்த்த வந்த ‘வள்ளுவம்’ வாழ்விலக்கணம் என்றால், அவ்வாழ்விலக்கணத்தின் முழுநிறை வாழ்விலக்கியம் புலவர் குழந்தையவர்களின் இராவண காவியம்.”
என்று குறிப்பிட்டுள்ளார்.
காவியத் தோற்றம் என்பதற்கு புலவர் குழந்தை கூறும் விளக்கம்
தமிழகக் காண்டம், காவியத் தோற்றம் படலத்தில் தாய்மை உள்ளம் கொண்ட தமிழர் தலைவனாம் இராவணனைத் தூய்மை உள்ளமற்ற தமிழர் சிலர் துணையோடு ஆய்ந்து அறியும் உள்ளம் இல்லாத ஆரிய இராமன் அழித்ததை வாய்மை இல்லாம வால்மீகி வடமொழியில் காவியம் இயற்றியதை கம்பன் பொய்க் காவியமாக செய்துள்ளார் என்பதை
கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென
நம்பி யையகோ நந்தமிழ் மக்களும்
தம்ப ழம்பெருந் தாய்க்குல மக்களை
வெம்ப கைபோல் வெறுத்திட லாயினர்.
(35)
(பொருள் – கம்பன் செய்த பொய்க் காவியத்தை மெய் என நம்பிய நம் தமிழர்கள், அய்யகோ! பெருமைக்குரிய நம் தொல்பழம் தமிழ் மறக்குடி மக்களைக் கொடிய பகைவர் போல எண்ணி வெறுக்கலாயினர்.)
இராவண காவிய பரப்பலின் தேவை: தற்போது இராவண காவியம் ஏன் தேவைப்படுகிறது என்றால், வால்மீகி இராமாயணத்தின் பெருமையை முழுவதுமாக அறிந்தவர்கள் அதிகமில்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள “கற்பனைக் கதாப்பாத்திரங்களில்”பொய் உருவேற்றிய கதைகளை மீண்டும் மீண்டும் கூறி மக்களை இராமாயண மயக்கத்தில் ஆழ்த்தியதின் விளைவு கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மதக் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அதன் விளைவு எண்ணற்ற அப்பாவிகள் தங்கள் உயிரை இழந்தார்கள். இராம ஜென்ம பூமிக்காக நடந்த கலவரத்தில் தமிழ்நாடு நீங்கலாக பல மாநிலங்களில் உயிர் பலிகள் நடந்தபோது தமிழ்நாட்டில் அவ்வாறு நடக்காமல் காத்து நின்றது தந்தை பெரியாரின் தொண்டர்களின் பிரச்சார வலிமை என்பதை மறுப்பதற்கில்லை. அந்த பிரச்சாரத்திற்கு வலிமை கூட்டுவது புலவர் குழந்தையின் இராவண காவியம் என்றால் அது மிகையல்ல. இராவண காவியம் பரப்பப்படும் போது, ஆரியச் சித்தாந்தமும் திராவிடச் சித்தாந்தமும் நேரெதிராக சித்தாந்த போர் புரியும், அப்போது ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும்; பூசனை மனப்பான்மை குறையும் என்பதே கட்டுரையின் நோக்கம். இராவண காவியம் அறிவோம், இராமாயண மயக்கம் அகற்றுவோம்.