பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வல்லம், செப்.21– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள்  நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர், ஊடகவியலாளர் உமா கலந்து கொண்டு ‘இவர் மட்டும் பிறவாதிருந்தால்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் உரையாற்றும் போது தந்தை பெரியாரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகின்றது. அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர் அவருடைய உருவப்படம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் திறக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் பிறக்காது இருந்திருந்ததால் தமிழ்நாடு உத்தரப்பிரதேசமாக ஆகியிருக்கும். இந்திய நேபாளமாக ஆகியிருக்கும் இந்தியாவையும் சேர்த்து பெரியார் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பாக தமிழ்நாடு எப்படி இருந்தது? பொது வாழ்வுக்கு வந்தபோது எப்படி இருந்தது? பொது வாழ்வுக்கு வந்த பின் எப்படி இருந்தது? தந்தை பெரியார் நடத்திய பேராட்டங்கள் என்னென்ன? அதனால் எற்பட்ட விளைவுகள் என்ன? இன்று வரைக்கும் எப்படி தொடர்கிறது? இனியும் ஏன் தொடர வேண்டும்? இவை யாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும்.

உயர்ஜாதியினரே ஆதிக்கம்

150 ஆண்டுகளுக்கு முன் அதிகார வர்க்கத்தில் உயர் ஜாதியினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த ஆதிக்கத்தைத் தகர்ந்தவர் தந்தை பெரியார். திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும், கல்வியில் கவனம் செலுத்தியதால்தான் இன்றைக்கு நம்முடைய குழந்தைகள் பொறியாளர் களாக, மருத்துவர்களாக வர முடிந்திருக்கிறது.

சமூகத்தில் பெரும்பால னோர் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தனர். வீதிகளில் நடப்பதற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டன. சொத்து வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமையெல்லாம் மாறி இருப்பதற்குத் தந்தை பெரியாரே காரணம்.

ஆங்கிலேயர் கொடுத்த கல்வி

தந்தை பெரியார் அவர்கள் பிரிட்டிஷ் காரர்களை ஆதரித்தார், ஆங்கிலேயர்கள்தான் எல்லோருக்கும் கல்வியைக் கொடுத்தார்கள். பெருந்தலைவர் காமராசர் எல்லோருக்கும் கல்வியை வழங்கியதால்தான் தந்தை பெரியார் அவரை பச்சைத் தமிழர் என்று கொண்டாடினார். ஒருவனுக்குக் கல்வியே முக்கியம் கல்வி கிடைத்து விட்டால் பகுத்தறிவு வரும்  – சுயமரியாதை பெருகும். கல்வி எப்படி இருக்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் எடுத்துக் கூறி இருக்கிறார்.  தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதற்குக் காரணம் தமிழில் அறிவியல் கருத்துகள் இல்லை என்பதாலேயே. தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகளே மிகுதி யாகக் காணப்படுகின்றன. இவை நம்முடைய முன்னேற்றத்திற்குப் பயன்படாது.

சமஸ்கிருத கல்வி மட்டுமே..!

திருவையாறு அரசுக் கல்லூரியில் சமஸ்கிருதக் கல்வி மட்டுமே கற்பிக் கப்பட்டு வந்தது. தமிழ் கற்பிக்கத் தடை இருந்தது. காரணம் கேட்டபோது, கல்விக்கு நிதி வழங்கிய மன்னர் எழுதிய உயிலில் சமஸ்கிருதம் மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று சமஸ்கிருதத்தில் எழுதி இருப்பதாக புளுகிக்கொண்டிருந்தனர். ஆனால் நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் அந்த உயிலைத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளுக்கு அனுப்பி சமஸ்கிருத வரிகளை வாசித்த போது பார்ப்பனர்கள் செய்த தந்திரம் வெளிப்பட்டது. கல்விக்குச் செலவழிக்கப்பட வேண்டும் என்றே உயில் கூறியிருக்கிறது.

ஆரியத்திற்கு
எதிரான குரல்

ஆரியத்திற்கு எதிரான முதல் கலகக் குரல் புத்தருடையது. திருவள்ளுவரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார். பெரியாருக்கு முன்பு சமயத் துறையில் வள்ளலார் பேசியிருக்கிறார். உடன்கட்டை ஏற்றும் கொடுமையை மாயவரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை கூறியிருக்கிறார். இவையெல்லாம் தனி மனிதனின் குரல்.தந்தை பெரியார் மட்டும்தான் இயக்கமாகக் கட்டமைத்தார். மக்கள் இயக்கமாக மாற்றினார். அதிலே வெற்றியும் பெற்றார் என்று தெரிவித்தார்.

களத்தில் இறங்கி போராடினார்

விழாவிற்குப் பல்கலைக் கழகப் பதிவாளர் பூ.கு.சிறீவித்யா தலைமை வகித்தார் அவர் தம் தலைமையுரையில் தந்தை பெரியார் தொலைநோக்காளர். அவருடைய கொள்கைகள் ஓர் ஊருக்கோ ஒரு நாட்டுக்கோ மட்டும் உரிய கொள்கைகள் கிடையாது. பூமிப்பந்தில் இருக்கின்ற 193 நாடுகளில் வாழ்கின்ற 850 கோடி மக்களுக்கும் பொதுவானது. தந்தை பெரியார் அறையில் அமர்ந்து கொண்டு சிந்தித்து எழுதிவிட்டுச் சென்றவர் கிடையாது. சிந்தித்தார் இயக்கம் கண்டார். பிரச்சாரம் செய்தார் பத்திரிகை நடத்தினார். களத்தில் இறங்கிப் போராடினார். தாம் வலியுறுத்திய கொள் கைகள் நம்முடைய வாழ்நாளிலேயே வெற்றி பெறுவதைக் கண்ணால் கண்டார்.  ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இந்த அய்ந்தும் அவர் வலியுறுத்திய கொள்கைகள்.

ஓயாது உழைத்தார்

ஓயாது உழைத்தார். 95 ஆண்டுகள் இடை விடாது பிரச்சாரம் செய்தார். அவர் வாழ்ந்த நாட்கள் 34,433  அதில் அவர் சுற்றுப் பயணங்கள் செய்த நாட்கள் 8,600. பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோமீட்டர் பேசிய நேரம் 21 ஆயிரத்து 400 மணி.

தந்தை பெரியாரின் பணி மகத்தான பணி யாகும். பெண்கள் உரிமை பெறுவதற்கு தந்தை பெரியார் காரணம். சமூகநீதி தழைத்து இருப்பதற்குத் தந்தை பெரியார் காரணம். பகுத்தறிவு பரவி இருப்பதற்குத் தந்தை பெரியார் காரணம் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டு இருப்பதற்குத் தந்தை பெரியார் காரணம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தந்தை பெரியார் காரணம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தந்தை பெரியார் காரணம். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் இருப்பதற்குத் தந்தை பெரியார் காரணம் என்று பேசினார்.

குருதிக்கொடை

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்கலைக்கழக மாண வர்கள் 102 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குருதிகொடை செய்தனர்.  இளங்கலை – வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் அ.நிக்கோலஸ் வரவேற்புரை வழங்கினார். இளங்கலை-இதழியல் மற்றும் மக்கள் தொடர் பியல் (மொழிகள் துறை) இரண்டாம் ஆண்டு மாண வர் க.தங்கமணி நன்றியுரை கூறினார். விழாவில் மாணவர்கள் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர். இளங்கலை அரசியல் அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி சு.அனு இணைப்புரை வழங்கினார்.

போட்டிகள்

அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் அய்யம் பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி இளங்கலை-தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோ.வியானி விஷ்வா முதல் பரிசையும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் கீ.பிரைசிங் ஜோஸ்வா இரண்டாம் பரிசையும், கும்பகோணம் அன்னை கல்லூரி முதுகலை இயற்பியல் முதலாம் ஆண்டு மாணவி வெ.பூர்ணிமா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி க.கவி பிரபா முதல் பரிசினையும், திருவையாறு அரசர் கல்லூரி இளங்கலை-தமிழ் இலக்கியம் முத லாம் ஆண்டு மாணவர் செ.வசந்தகுமார் இரண் டாம் பரிசினையும் பெற்றனர்.

மாணவிகளுக்கு பரிசுகள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இளங்கலை-அரசியல் அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி க.அ.யாழினி முதல் பரிசினையும், இளங்கலை தொழில்நுட்பவியல் கணினி அறிவியல், மூன்றாம் ஆண்டு மாணவி பா.கன்னிகா பரமேஸ்வரி இரண்டாம் பரிசிைனயும், இளங்கலை-தொழில் நுட்பவியல் மின்னணு தகவல் தொடர்பியல் இரண்டாம் ஆண்டு மாணவி பு.தாரிணி மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் களுக்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இளங்கலை, அரசியல் அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி த.பிரதீபாதேவி முதல் பரிசினையும் இளங்கலை-அரசியல் அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி தா.ஜெபசில்வியர் இரண்டாம் பரிசினையும் இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர் நா.ஜஸ்வந்த் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

கருத்தரங்கம்

தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி வள்ளுவர் அரங்கத்தில் தகவலியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆ.முத்தமிழ்செல்வன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  ஜாதி ஒழிப்பு எனும் தலைப்பில் கல்வியில் துறை வருகை தரு ஆசிரியர் மோ.செ.சக்திவேல் முருகன், பெண் விடுதலை எனும் தலைப்பில் இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜா.ஜெனிவியா ஜான்சி,   சமூக நீதி எனும் தலைப்பில் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஞா.அனிதா ‘பகுத்தறிவு பரப்பல்’ எனும் தலைப்பில் முதுகலை சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவர் பெ.ஹரிஹரன்  கருத்துரை வழங்கினார்கள்.  இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவி சு.தீப்ஸிகா வரவேற்புரை வழங்கினார். இளங்கலை இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி யுவசிறீ நன்றி நவின்றார்.

பட்டிமன்றம்

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பல்கலைக்கழக ஃபிராய்டு அரங்கத்தில் தந்தை பெரியாரின் தொண்டு வென்றிடக் காரணம் கருத்துப் புரட்சியே களப் போராட்டமே! என்ற தலைப்பில் எழுத்தாளர் கு.இலக்கியன் தலைமையில் பட்டிமன்றம் நடை
பெற்றது.  இளங்கலை தகவலியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பா.அனுசுயா தேவி, இளங்கலை தகவ லியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ந.திவ்யதர்ஷனா, உயிரி தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன், மொழிகள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.சுந்தராம்பாள் முதலியோர் பட்டிமன்றத் தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார் முதுகலை சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவி சு.அகல்யா வரவேற்புரை கூறினார்.  முதுகலை சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவி தே.எப்சிபா நன்றியுரை வழங்கினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *