கொல்கத்தா, செப்.21– மேற்கு வங்காளத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள், குறிப்பாக, நன்னடத்தையுடன் செயல்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த 2011 முதல் இதுவரை
840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். 45 ஆயுள் தண்டனை கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்த்துகள். விடுதலையான வர்கள் நல்ல குடிமக்களாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவுரங்கசீப்பை பற்றி சிறப்பாக பேசி விட்டாராம்
துணை வேந்தரை மன்னிப்பு கேட்க
வைத்த மத வெறியர்கள்
ஜெய்ப்பூர், செப்.21- ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ளது மோகன்லால் சுக்காடியா பல்கலைக்கழகம். பேராசிரியை சுனிதா மிஸ்ரா, இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ளார். அவர் இந்த மாதத்தில் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், முகலாய பேரரசர் அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்த கருத்துக்களுக்கு மேவார் மண்டலத்தில் ராஜ்புத் உள்ளிட்ட பல சமூகத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பினர் பல்கலைக்கழக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை வேந்தர் சுனிதா மிஸ்ரா, வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொலிப் பதிவில். “நான் வளர்ந்த இந்தியா பற்றி பேசும்போது மன்னர் வம்சம் குறித்து தவறுதலான கருத்துகளை குறிப்பிட்டுவிட்டேன். எனது கருத்துகள் எதிர்பாராதவிதமாக பலரையும் காயப்படுத்தி இருப்பதை அறிந்து இதயத்தில் இருந்து மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறி உள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 2 தேர்வு, நுழைவுச்சீட்டு வெளியீடு
சென்னை, செப்.21: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நுழைச்சீட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவர்களுடைய ஒரு முறை பதிவுதளத்தின் (OTR DASHBOARD) மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகை தேர்வானது, செப்டம்பர் 28ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.