துப்பாக்கி பூஜை சூரர்களின் ‘ஹிந்து ராஜ்ஜியம்?’

2 Min Read

வட மாநிலங்களில் நேற்று ‘விஸ்வ கர்மா பூஜை’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், ஆயுத காவல் படை பிரிவில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு அர்ச்சகர் பூஜை செய்தார். (‘தினமலர்’, 18.9.2025)

மேலே வந்துள்ள படமும், ‘தினமலர்’ ஏடு தரும் படம் விளக்கமும் படித்தீர்களா?

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) படும்பாடு, இந்தப் ‘பாரத’ பூமியின் வடக்கு எப்படிப்பட்ட பகுத்தறிவுக் கொழுந்துகளை – அதிலும் குறிப்பாக, உ.பி. போன்ற மாநிலங்கள் எவ்வளவு மவுடீகத்தின் மடியில் உள்ளன என்பது புரிகிறதா?

‘ஆயுத பூஜை’ என்ற பெயரால் கம்ப்யூட்டர்க ளுக்கும் குங்குமம், பொட்டு முதலியன இட்டு வணங்கும் அறியாமை இருட்டு எப்படியெல்லாம் வேரூன்றிடுமோ என்ற அச்சம் உள்ளன என்பதற்கு இது ஒரு சிறு முன்னோட்டம் – ‘சாம்பிள்!’

துப்பாக்கியில் குண்டுகள் (ரவை) போடாமல், வெறும் ‘பூஜை செய்து’, கடவுள் சக்தியால், தெய்வ கடாட்சத்தால் அதை வெடிக்கச் செய்ய முடியுமா?

முடியாது; முடியவே, முடியாது – புரட்டு செய்தாலொழிய!

இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாட்டின் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு போட்டு, அவை  அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட பிறகு, அம்மக்களின் தளராத தன்னம்பிக்கையும், திட்டமிடும் திறன் காரணத்தாலும், முன்பு ஒருமுறை வெள்ளி கிரகத்திற்குத் தனது ஏவுகணையை அனுப்பி,  வெற்றி பெறாத  நிலையில், இம்முறை அந்நாடு வெற்றி பெற்றுள்ளது!

இயற்கைப் பேரிடரான பூகம்பம், சுனாமி போன்றவை இடையிலும் அவர்கள் இடையறாமல் உழைத்து, சாதித்து உலக வழிகாட்டிகளாகின்றனர்!

நம் ‘ஞானபூமி’யிலோ இஸ்ரோ விஞ்ஞானிகளின் திறமைமிக்க கடும் உழைப்பினால் உருவாகி, வெற்றியைத் தருவனவாக ராக்கெட்டுகள் அமைந்தாலும்கூட, அதற்கும் திருப்பதி வெங்கடாசலபதியிடம் சென்று, வணங்கி, ‘தீபதூப ஆராதனை’ செய்துவிட்டு அனுப்புகின்றனர்.

விஞ்ஞானிகளே இத்தகைய மூடத்தனத்தின் முற்றமாக இருக்கும் நிலையில், வடகிழக்குத் திரிபுரா மாநிலத்திலும் இப்படித் துப்பாக்கிக்குப் பூஜை போடும் அறியாமை உருவங்கள் இருக்கத்தானே செய்வர்!

வேகமாக ‘ஹிந்துத்துவா’ என்ற ஹிந்துராஷ்டிரத்தை நிறுவ அரசிலமைப்புச் சட்ட விரோத இந்த விசித்திர வெட்கமிகு செயல்கள் நாளும் பெருகியே வருவது, மகாமகா வெட்கக்கேடு அல்லவா!

நாளும் மூடநம்பிக்கையினால் உயிர்ப்பலிகள் நடைபெறுவது அதிகமாகிக் கொண்டே உள்ளது நம் நாட்டிற்குப் பெருமையா?

விஞ்ஞானிகள் பலர் படிப்பாளிகளே தவிர, பகுத்தறிவைப் பயன்படுத்தத் தெரியாத பரிதா பத்திற்குரியவர்களாக இருக்கின்றனர்!

‘வாஸ்து சாஸ்திரம்’ பார்த்துக் கட்டாததால், முன்பு ‘வெள்ளைக்காரன்’ கட்டிய பழைய நாடாளு மன்றத்தில் தாக்குதல் நடந்ததென்று பிரதமர் மோடி ஒரு புதிய கட்டடத்தை, அவர் இஷ்டம்போல் திட்ட மிட்டுக் கட்டிய பிறகும், அங்கே என்ன நடந்தது?

திடீரென்று நடந்த இதுபோன்ற நிகழ்வுகள்  எல்லாம் ‘‘பரிகார பூஜை’’, புனஸ்காரத்தால் போகுமா?

இந்திய  அரசியலமைப்புச் சட்டம் 51–ஏ பிரிவில் – அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) அறிவியல் மனப்பான்மை பரப்ப, மூடநம்பிக்கை களை ஒழிக்க வலியுறுத்தும் சட்டப் பிரிவுகளுக்கு நீண்ட விடுமுறை அளித்துவிட்டு, தங்களது ‘இஷ்டபந்து மித்திரர்களான’ சாமியார்கள், பண்டா ரங்களை வைத்து, காவி ஆட்சி நடத்தி, நாட்டை பின்னோக்கி (கல்வித் திட்டம்) இழுத்துச் செல்லும் நிலை!

‘பரந்த பாரதமே’,
உன் கதி இப்படியா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *