கேள்வி 1: திருமணம் என்ற பெயரில் பணத்தை தண்ணீர் போல் விரயமாக்கும் பெற்றோர்கள், ‘போட்டோ ஷுட்’ என்று பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து படக்காட்சிகளை எல்இடியில் திரையிடும் மணமக்கள் திருந்துவது எப்படி?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில்: நியாயமான கேள்வி இது. மாநில அரசு இதற்கு எனத் தனி வரி போட்டு வருவாயைப் பெருக்கலாம். வாக்கு வங்கி என்னாகும் என்ற கவலையைத் தாண்டிச் சிந்தித்தால் இது முடியும். அம்பானி, அதானிகள் செலவழிக்கலாம் – நடுத்தரகுடும்பங்களுக்கு இந்த அவசியமற்ற ஆடம்பரத்தில் வீண் விரயம் – ‘வான்கோழிகளாகும்’ கொடுமை!
••••
கேள்வி 2: உலகப் பொதுமறையான திருக்குறளை சீனப்பெண்மணி ஒருவர் தமிழில் பாராட்டியுள்ள வீடியோ வைரலாகி இருப்பது குறித்து…?
– க. தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில்: அந்த அம்மையாரை சீனாவுக்குப் போனபோது சீன வானொலி நிலையத்தில் சந்தித்ததாக நினைவு – மதுரைக்கு வந்து, தமிழ் கற்று சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பல சீன மகளிர் பணியாற்றுவதைக் கண்டு வியந்ததினால் இதை வரவேற்கிறோம்.
••••
கேள்வி 3: தேர்தலில் தோற்றாலும் எங்கள் சித்தாந்தப் போராட்டம் எப்போதும் இல்லாத அளவில் அதிக வீரியத்துடன் தொடர்கிறது என உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி சுதர்சன் (ரெட்டி) கூறியுள்ளது எதைக் காட்டுகிறது?
– பா. ஆகாஷ், புதுடில்லி.
பதில்: அடக்கமும், ஆழமான கருத்தாழமும் உடைய சிறந்த முற்போக்கு வாதி. அவர் அமித்ஷாவுக்குக் கொடுத்த பதிலிலேயே இது விளங்கும்.
••••
கேள்வி 4: நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த காவலர் தேனி முனியாண்டியின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டு 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த மனிதநேயம் பெரும்பாலோரால் கடைப்பிடிக்கப்படாதது ஏன்?
– ப. தேன்மொழி, தேனி.
பதில்: மனிதர்கள் இருக்கிறார்கள் – ஆனால் மனிதநேயத்தைக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது.
••••
கேள்வி 5: ஒன்றிய – மாநில அரசுகள் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் தற்கொலை எண்ணம் அறவே துளிர்விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
– ச. முத்துமணி, மதுரை.
பதில்: தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவத்தையே தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் வகையில் வகுப்பறைகளில் ஈர்ப்பு வரை, இளமையில் மாணவர்கள் அவற்றைக் கற்று அறிய வகை செய்தல் வேண்டும்.
••••
கேள்வி 6: ஜாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதானே?
– பா. சந்தானம், வாணுவம்பேட்டை.
பதில்: மேலும் கடும் நடவடிக்கையைத் தடுப்பு ரீதியாகவே தயவு தாட்சண்யம் பார்க்காமல் செய்வதே சரி. வெறும் மாற்றல் சரியானதா? அதே ஜாதி உணர்வைப் பணி மாறுதலுக்குச் செல்லுகின்ற புது ஊரிலும் பரப்பிடும் தொற்று மேலும் பரவுமே! பணியிட மாற்றல் முறை மட்டுமே சரியாகுமா?
••••
கேள்வி 7: ‘கூட்டணிக் கட்சிகளை ‘‘பிளவுபடுத்தி, கூறு போடுவது பாஜக வின் வழக்கம்’’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்திருப்பது சரியான மதிப்பீடாகக் கருதலாமா?
– சு. சண்முகம், மணிமங்கலம்.
பதில்: அது பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கைவந்தகலை. ‘‘ஒநாயின் வயிரை பாதுகாப்பு என்று நினைத்து ஓடும் ஆட்டு குட்டிகளாக’’ இருப்பதால் புரியாது. இது அ.தி.மு.க. உள்பட அனைவருக்கும் பொருந்துகிறது!
••••
கேள்வி 8: ஏழை எளிய மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியின்றி அல்லல்படும் அவல நிலையில், கல்லால் செதுக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்கு அன்றாடம் 100 கிலோ அளவில் விதவிதமான வண்ண மலர்களால் அலங்காரம் என்பது அவசியம்தானா?
– அ. அங்காளம்மாள், அய்தராபாத்.
பதில்: ‘‘பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்ற பெரியாரை நினைக்கிறீர்களா?
••••
கேள்வி – 9: வன்முறைத் தீயால் பற்றி எரியும் நேபாளத்தில் இளைஞர்கள் நடத்துகின்ற போராட்டத்திற்குக் காரணம் என்ன? அப்போராட்டம் சரியானதா?
– ம.ஆறுமுகம், ஓசூர்.
பதில்: ஆர்.எஸ்.எஸ். கை இருக்கிறது, அந்த நாட்டை மீண்டும் ஹிந்து நாடாக ஆக்கவே இத்தகைய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
••••
கேள்வி 10: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளான எம்.பி.க்கள் அளித்துள்ள வாக்குகளில் செல்லாத வாக்குகள் இருப்பது வேடிக்கை – வினோதம் அல்லவா?
– அ. சுமதி, கோவை.!
பதில்: ‘வித்தைகள்’ அல்லது விலைபோன அரசியல் வியூகத்தில் இது ஒரு புது உத்தி ஆகும்! திட்டமிட்டே செல்லாத ஓட்டுப்போட்டு நினைத்ததைச் சாதிக்கலாம் என்ற அரசியல் கலை.