ஆதாரத்தோடு மேடையில் பேசுகின்ற ஒரே வரலாற்றுப் பேராசிரியர் ஆசிரியர்தான்!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்
உயர்கல்வித் துறை அமைச்சர் – இணைவேந்தர் கோவி.செழியன் நெகிழ்ச்சியுரை!

ஆசிரியர் அய்யா அவர்கள், மேடையில் உரையாற்றும்போது,
நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வருவார்!

 

சென்னை,  செப்.19 ஆசிரியர் அய்யா அவர்கள், மேடையில் பேசும்போது, நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வருவார். நான் அறிந்தவரை, தெரிந்தவரை, மேற்கோள் காட்டிப் பேசுகின்ற புத்தகத்தின் பெயர் என்ன? பதிப்பகத்தார் பெயர் என்ன? ஆசிரியரின் பெயர் என்ன? எந்தப் பக்கத்திலிருந்து எடுத்துப் பேசுகிறார்? உள் பக்கத்தில், தலைப்பு என்ன? என்று ஆதாரத்தோடு மேடையில் பேசுகின்ற ஒரே வரலாற்றுப் பேராசிரியர் ஆசிரியர்தான் என்றார் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான கோவி.செழியன் அவர்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம்!

கடந்த 11, 12.9.2025 ஆகிய இரு நாள்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் நடைபெற்றது. இரண்டாம் நாள் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக் கழக இணைவேந்தருமான கோவி.செழியன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

17.9.2025 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது நிறைவுரையின் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டில் யாராவது ஒருவர், தன் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைப் போட்டுக் கொள்கிறானா?

திராவிடம் இதைவிட
வேறு என்ன செய்யவேண்டும்?

திராவிடம் என்ன செய்துவிட்டது? என்று நம்மில் சிலர் கேட்கிறார்களே, தம்பிமார்களைப் பார்த்துச் சொல்கிறேன், திராவிடம் இதைவிட வேறு என்ன செய்யவேண்டும்?

ஒரு ஓலைக் குடிசையில் பிறந்த சாதாரண தொண்டன் கோவி.செழியன், இன்றைக்கு எம்.ஏ, பி.எல்., பிஎச்.டி., உயர்கல்வித் துறை அமைச்சர், இது யாரால், எப்படி வந்தது?

திராவிடமும், பெரியாரும், அண்ணாவும்,  தலைவர் கலைஞரும், திராவிட இயக்கமும்,  முதலமைச்சரும் இல்லையென்றால் கிட்டியிருக்குமா?

எனவே, தமிழ்நாட்டில், தன் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதியின் பெயரை வெட்டி, தூக்கி எறிந்துவிட்டு, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., எம்.ஏ,. எம்.எஸ்சி., என்று போட்டுக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கம், திராவிட இயக்கம், திராவிட இயக்கம்! இதை கைதட்டி வரவேற்க வேண்டும் நீங்கள்.

யாராலும் வீழ்த்த முடியாத பேரியக்கம்  திராவிட இயக்கம்!

இதைவிட சிறப்பு, பெருமை வேறு எந்த மாநி லத்திற்கு உண்டு. இதை எங்கே காண முடியும்?

எனவேதான், யாராலும் வீழ்த்த முடியாத பேரியக்கம் திராவிட இயக்கம், திராவிட சக்தி.

இல்லையென்றால், இப்பேர்ப்பட்ட ஆளு மையும், துணிவும் வேறு யாருக்குக் கிடைக்கும்?

பெரியார், தான் மட்டும் துணிவோடு இருக்க வில்லை. தன் கடைகோடி தம்பியும் துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்தவர் தந்தை பெரியார்.

நீ துணிவோடு நில்! ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள் என்று சொன்னவர் பெரியார். அறிவுப்பூர்வமாக சிந்தித்தவர் பெரியார்.

அப்படி வாழ்ந்த தலைவர்களின் ஆட்சி அதி காரம் கோட்டையில் இருந்திருக்கிறது. இப்போது வரையில் இருக்கிறார்கள்.

10 ஆயிரம் கோடி ரூபாயைத் தந்தாலும் நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம்!

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்த நேரத்தில்,  ‘‘நாங்கள் சொல்லுகின்ற தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்; ஹிந்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். 5 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறோம்; நீங்கள் கேட்பது வெறும் 2,500 கோடி ரூபாய்தான்’’ என்று ஒன்றிய அரசு சொன்ன நேரத்தில்,

5 ஆயிரம் கோடி ரூபாய் என்ன? நீங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’’ என்று புதிய யுக்தியைக் கையாளுகிறாரே, எப்படி கிடைத்தது அந்த வீரம், துணிவு?

அய்யாவின் துணிவுதானே அடிப்படைக் காரணம்.

அய்யாவினுடைய லட்சியம்தானே ஒவ்வொரு தனி மனிதனுடைய சுயமரியாதை.

துணிவு, ஆற்றல், அறிவு, வெளிப்பாடு. இல்லை யானால், பெரியாரின் கொள்கைகளை உலக மயமாக்கிப் பேசிக் கொண்டிருக்கின்ற காலம் உருவாகியிருக்குமா? என்று தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

பெரியாரின் கொள்கைகளை சிந்தித்து செயல்பட்ட காரணத்தினால், இன்றைக்கு அறிவுக்கு ஒரு பெரிய எழுச்சியும், புரட்சியும் கிடைத்திருக்கின்றது. இல்லையென்றால், மூடப்பழக்க வழக்கங்களும், ஸநாதனங்களும் மண்டிக் கிடக்கும்.

அதிலும்கூட மாறுபாடு உடையவர் நம்முடைய திராவிட இயக்கத்தினுடைய மூத்த தலைவர் அல்லவா!

இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக ஒரு செய்தியைச் சொல்கிறேன்.

கலைஞருக்கு, இந்து முன்னணி இராம.கோபாலன், ‘பகவத் கீதை’ நூலினை கொடுத்தார்!

கோபாலபுரத்தில் கலைஞர் அவர்கள் இருக்கிறார். இந்து முன்னணியினுடைய தலைவர் மரியாதைக்குரிய இராம.கோபாலன் வருகிறார்.

கோபாலபுரத்தில் ஒரே பரபரப்பு; காவல்துறை யினருக்குப் பரபரப்பு, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்தினருக்குப் பரபரப்பு.

மாடியில் இருந்த கலைஞரிடம், இராம.கோபாலன் வந்திருக்கிறார் என்ற தகவலைச் சொல்கிறார்.

அரை மணிநேரம் கழித்து, கலைஞர், தன்னை தயார்படுத்திக் கொண்ட பிறகு, அவரை வாருங்கள் என்று மாடிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடகத்தோடு மேலே ஏறுகிறார்கள், அங்கே கலைஞர் அமர்ந்திருக்கின்றார்.

மேலே சென்றவுடன், மரியாதைக்குரிய இராம.கோபாலன், தலைவர் கலைஞருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்கிறார், அது பகவத் கீதை புத்தகம்.

இராம.கோபாலனுக்கு, ஆசிரியர் எழுதிய ‘‘கீதையின் மறுபக்கம்’’ நூலினை கொடுத்தார் கலைஞர்!

அந்தப் புத்தகத்தை வாங்கி, பக்கத்தில் வைத்து விட்டு, இராம.கோபாலன் அவர்களுக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். அந்தப் புத்தகம்தான், அய்யா ஆசிரியர் எழுதிய ‘‘கீதையின் மறுபக்கம்.’’

இந்த இயக்கத்தை வீழ்த்த யார் பிறந்தி ருக்கிறார்கள்? இதுவரை பிறக்கவில்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்பதற்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்?

ஆட்சி அதிகாரம்தான் உயர்ந்த பெரும் பதவி. அது அரசு பதவியில் இருந்தாலும் அது அதிகாரம்தான், பதவிதான், பொறுப்புதான்.

ஒரு மாநகராட்சி மன்ற  உறுப்பினராக இருந்தாலும் பதவிதான், பொறுப்புதான், அதிகாரம்தான்.

முதலமைச்சராக இருந்தாலும் பதவிதான், பொறுப்பு தான், அதிகாரம்தான். அதன்மூலம் மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஒரு பவர்.

1991 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர். அப்போது ஆளுநராக இருந்தவர் மரியாதைக்குரிய சுர்ஜித் சிங் பர்னாலா.

தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு கையெழுத்து போட மறுத்த ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா!

டில்லிக்கு ஆளுநரை அழைத்து, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது; தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்கள்.

ஆளுநர் மறுத்தார். ‘‘நான் பஞ்சாபில் பிறந்தவன். வெடிகுண்டுகள் அதிகம் வீசுகின்ற மாநிலம். சட்டம் – ஒழுங்கு என்னவென்று எனக்குத் தெரியும்.

ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு, பேரக் குழந்தைகளோடு நிம்மதியாக தமிழ்நாட்டில் தூங்குகிறேன். சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கின்ற மாநிலத்தை நான் கலைக்க மாட்டேன்’’ என்றார்.

குடியரசுத் தலைவர் சொன்னதற்குப் பிறகும், ஓர் ஆளுநர் முடியாது என்று மறுத்துவிட்டு, சென்னைக்கு வந்து இறங்கினார் விமான நிலையத்தில்.

பத்திரிகையாளர்கள் அவரிடம் ஓடிச் சென்று சொன்னார்கள், ‘‘நீங்கள் ஆட்சியைக் கலைக்க மறுத்த காரணத்தினால், உங்களை மகாராட்டிர மாநிலத்திற்கு மாற்றியிருக்கிறார்கள்’’ என்று.

வேறு எந்த பேடிகளுக்கும் இனிமேல் ஆளுநராக இருக்கமாட்டேன்!

அந்தச் செய்தியைக் காதில் வாங்கிய சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள், தன்னுடைய தாடியைத் தடவிக் கொண்டே சொன்னாராம், ‘‘வீரமிக்க, ஆண்மைமிக்க கலைஞர் கருணாநிதி ஆளுகின்ற தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்துவிட்டு, வேறு எந்த பேடிகளுக்கும் இனிமேல் ஆளுநராக இருக்கமாட்டேன்’’ என்று சொல்லி, பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, பஞ்சாப் போனார்.

காலங்கள் ஓடின. மூன்று நாள்கள் கழித்து, டில்லியில் மீண்டும் ஒரே பரபரப்பு.  ஆளுநர் மறுத்தாலும், தமிழ்நாட்டின் ஆட்சியைக் கலைக்கவேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

குடியரசுத் தலைவரைப் பிடி, சட்டத்தில் ஓட்டையைத் தேடு ‘அதர்வைஸ்’ என்ற வார்த்தையை நாடு – 356-ஏ – ஆளுநர் மறுத்தாலும், குடியரசுத் தலைவர் கையெழுத்துப் போடலாம்.

அன்று மாலை 5 மணியளவில் கோபாலபுரத்தில், கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டார், துரைமுருகன், அண்ணன் முரசொலி மாறன், இன்றைய முதலமைச்சர் அண்ணன் தளபதி.

ஆட்சியைக் கலைத்துவிடுவார்களா? என்று வெளியே ஒரே பரபரப்பு.

ஆட்சிக் கலைப்புச் செய்தியும் – கலைஞரின் வேடிக்கை பேச்சும்!

கலைஞருடைய உடல்நலத்தைப் பாதுகாக்கின்ற டாக்டர் கோபால். வெளியிலிருந்து வந்த அவர், “அண்ணா, அண்ணா, அண்ணா கடைசியில் கையெ ழுத்துப் போட்டுவிட்டாராம் குடியரசுத் தலைவர்’’ என்றாராம்.

அந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் அவர்கள்,  ‘‘கடிதம் என்றால், கடைசியில்தான் கையெழுத்துப் போடுவார்கள்’’ என்றாராம்.

கலைஞரின் இடது பக்கம் பார்க்கிறார் மூன்று பேர், வலது பக்கம் மூன்று பேர், தன்னை சேர்த்து ஆறு பேர்.

தன்னுடைய உதவியாளர் இராமசாமியை அழைத்தார், வந்தவரின் கண்களில் வழியும் கண்ணீரோடு வருகிறார், ஆட்சி போய்விட்டதே அய்யாவிற்கு என்று.

‘‘ஆறு காப்பி எடுத்துக்கொண்டு வா!’’ என்கிறார்.

உதவியாளர் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே போகிறார்; ‘‘ஆறாமல் எடுத்துக்கொண்டு வா’’ என்று கலைஞர் சொல்கிறார்.

கலைஞர் உள்ளத்தில் இருந்தது
பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னிலை மாறாமல், தங்கக் கலசமாக கலைஞர் மின்னியதற்குக் காரணம், அவர் உள்ளத்தில் இருந்தது பெரியார்! பெரியார்!! பெரியார்!!! இல்லையென்றால், அவர் சாதாரண மனிதர்தான்!

எனவே, அந்த உணர்வு என்றைக்கும் பட்டுப்போகக் கூடாது, தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்நாடு முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்ற அன்று, இந்த எளியவன் சட்டமன்றத்தில் இருக்கிறேன்.

2011, திருவிடைமருதூர் தொகுதி – எதிர்க்கட்சி.

2016, திருவிடைமருதூர் தொகுதி – எதிர்க்கட்சி.

2021 இல், ஆளுங்கட்சியாக அரசு கொறடாவாக அமர்ந்திருக்கின்றேன், முதலமைச்சர் பேசுகிறார், பின்வரிசையில் நான்.

‘‘இந்த ஆட்சி, நீதிக்கட்சியின் மீட்சி’’ என்று சொன்னது அன்புத் தலைவர்  தளபதி அவர்கள்.

எனவேதான், இன்றைக்கும் நாம் நின்று கொண்டி ருக்கின்றோம். அந்த மீட்சியின் தொடர் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

அறிவுப் புரட்சிக்கு
வித்திட்டவர் பெரியார்

‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பெரியார் சொன்னது.

அண்மையில் நான் படித்த ஒரு கவிதை,

‘‘கடவுள் கேட்டான்,

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று?

மனிதன் கேட்டான்,

இது தெரியாத நீ

கடவுளா என்று!’’

இதற்கு விதை யார்? வித்திட்டவர் யார்? பெரியார் என்ற மாமனிதர்தானே!

மனிதனை மனிதனாக மாற்றுகிற பேரியக்கம், திராவிட இயக்கம்!

எதற்காக என்று சொன்னால், மரியாதைக்குரிய ஓர் அறிஞர்,  ‘‘ஒரு மனிதனை எளிதில் கடவுளாக்கி விடலாம்; ஆனால், மனிதனை மனிதனாக மாற்றுகிற பேரியக்கம், திராவிட இயக்கம், அந்தப் பெரும்படை நூறாண்டைக் கடந்து செல்கிறது’’ என்றார்.

இன்னும் தேவைப்படுகிறது. மனிதன் மனித னாக வாழாமல் இருக்கிறான். வேறுபாடு பார்க்கிறான். ஏற்றத்தாழ்வு பார்க்கிறான்; தலையில், காலில் பிறந்தவன் என்று நம்பிக் கொண்டிருக்கின்றான்.

அந்த மூடர்களை வேரறுக்கின்ற பெரும்படைதான்  திராவிட இயக்கம். கற்றறிந்த சான்றோர்கள், பெரியோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் அறிவியல் பூர்வமான நூல்களைப் பெரியாரின் தத்துவங்களை எடுத்துச் சொல்லிச் சொல்லி பேசியாகவேண்டும்.

அந்த ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தருவது தான், இதுபோன்ற பயிலரங்கத்தினுடைய, கருத்த ரங்கத்தினுடைய நோக்கங்கள்.

ஆதாரத்தோடு மேடையில் பேசுகின்ற ஒரே வரலாற்றுப் பேராசிரியர் ஆசிரியர்தான்!

ஆசிரியர் அய்யா அவர்கள், மேடையில் பேசும்போது, நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வருவார். நான் அறிந்தவரை, தெரிந்தவரை, மேற்கோள் காட்டிப் பேசுகின்ற புத்தகத்தின் பெயர் என்ன? பதிப்பகத்தார் பெயர் என்ன? ஆசிரியரின் பெயர் என்ன? எந்தப் பக்கத்திலிருந்து எடுத்துப் பேசுகிறார்? உள் பக்கத்தில், தலைப்பு என்ன? என்று ஆதாரத்தோடு மேடையில் பேசுகின்ற ஒரே வரலாற்றுப் பேராசிரியர் ஆசிரியர்தான் என்பதை அடிக்கடி நான் எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்வேன்.

சித்தாந்தங்கள் நிறைந்த இயக்கம் திராவிட இயக்கம்.

தத்துவங்கள் நிறைந்த இயக்கம் திராவிட இயக்கம்.

பெரியார் புகழ் பாடுவோம்!

அந்த இயக்கத்தின் பணி தொடர, தொடர – கல்வி யாளர்களே, சான்றோர்களே, பேராசிரியர்களே, மாணவச் செல்வங்களே, பகுத்தறிவுச் சிந்தனையோடு நம் பயணத்தைத் தொடருவோம், தொடருவோம்; பெரியார் புகழ் பாடுவோம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலையின் இணை வேந்தருமான கோவி.செழியன் நிறைவுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *