‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்?
நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா?
நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை!
- ‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா?
- தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை!
- சிலையைப் புனரமைப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல; அது தொல்லியல் துறையின் வேலை!
- எது தவறு? எது ஏற்க முடியாதது?
- வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
- கூறியதில் என்ன முரண்பாடு உள்ளது!
- மதவெறி அமைப்புகளுக்கு எதிராக…
‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும்,நீதிபதி களையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மீதான வி.எச்.பி.யின் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது – விஷமத்தனமானது – கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு என்ற பெயரில், விளம்பரத்திற்காகவே போடப்பட்டுள்ள ஒரு வழக்கு – தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்களது அமர்வில், விசாரணைக்கு சில நாள்களுக்கு முன் வந்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில், பிரபல சிற்பங்கள் உள்ள கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள ஜாவரி கோவிலில் 7 அடி உயரமுள்ள விஷ்ணு சிலை சேதமடைந்துள்ள நிலையில், அதைப் புனரமைக்கக் கோரிதான் இந்தப் பொதுநல வழக்கு(?) போடப்பட்டது.
அவ்வழக்கை விசாரித்தத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கினைத் தள்ளுபடி செய்தது.
‘‘விளம்பர நோக்கத்திற்காகவே இம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலையைப் புனரமைப்பது
நீதிமன்றத்தின் வேலையல்ல;
அது தொல்லியல் துறையின் வேலை!
நீதிமன்றத்தின் வேலையல்ல;
அது தொல்லியல் துறையின் வேலை!
சிலையைப் புனரமைப்பது குறித்து கடவுளிடமே சென்று கேளுங்கள்; விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று நீங்கள் கூறுவதால், அவரிடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக நீதிமன்றத்தை நாடி வந்தீர்கள்? சிலையைப் புனரமைப்பது நீதி மன்றத்தின் வேலையல்ல. அது தொல்லியல் துறையின் வேலை. சிலையைப் புனரமைக்கும் அதிகாரம் தொல்லியல் துறையிடம்தான் இருக்கிறது; இதைவிட, உச்சநீதிமன்றத்திற்குப் பல வேலைகள் இருக்கின்றன.
கஜுராஹோ கோவில் உள்ளேயே பெரிய சிவலிங்கம் இருக்கிறது. சைவ சமயத்தின்மீது உங்களுக்கு வெறுப்பு இல்லை என்றால், அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துங்கள்’’ என்று தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் கூறினார்.
அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, விசுவ ஹிந்து பரிஷத், தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டியுள்ளது!
‘‘அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தத்தற்கு நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) முக்கிய காரண மல்ல; விசுவ ஹிந்து பரிஷத்தே!’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியதை நினைத்துப் பார்த்தால், இவர்களது ‘‘செயல்திறனின் பெருமை’’ விளங்கும்!
சமூக வலைதளங்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் அவர்களை, ‘‘மத நம்பிக்கை யைப் புண்படுத்தி விட்டார்’’ என்று குற்றம் சாட்டுப வர்களைப் பார்த்துக் கேட்கிறோம் –
எது தவறு? எது ஏற்க முடியாதது?
அவர் கூறிய கருத்துகளில் எது தவறு? எது ஏற்க முடியாதது?
- கடவுள் சர்வ சக்தி படைத்தவர் (Omnipotent) 2. சர்வ வியாபி (Omnipresence) 3. சர்வதயாபரன் (Omniscient) என்று நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்களே, அதனைத்தானே தலைமை நீதிபதி பிரதிபலித்துக் கேட்கிறார்.
அதுமட்டுமல்ல, தொல்லியல் துறையிடம் முறை யிட்டு, தீர்வு காணவேண்டும் – உண்மையிலேயே வழக்காடிகளுக்கு அக்கரை இருந்தால்! ஆனால், இது முழுக்க முழுக்கத் தலைமை நீதிபதி மீதுள்ள வன்மத்தால், ஏதோ ஒரு பின்னணியுடன், அவரையும், இதர உச்சநீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களது சுதந்திரமான கருத்தடங்கிய, சரியான சட்ட விளக்கப்படி கூறும் தீர்ப்புகளை இனி அவர்கள் தரக்கூடாது என்ற நோக்கத்துடன் – அச்சுறுத்தல், மிரட்டல்மூலம் அல்லது அவதூறு பரப்புவதன்மூலம் செய்யப்பட்டிருக்கும் ‘விஷம தானமே’ ஆகும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அவர்கள் பதவியேற்று, அவரது சொந்த மாநிலத்திற்கு முதன்முறையாக சென்றபோது, எப்படி அலட்சியப்படுத்தினார்கள் என்பது அந்தப் படலத்தின் தொடக்கம். அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தனது உழைப்பு, ஆற்றல், சட்ட மேலாண்மைமூலம் உயர்நீதிமன்ற நீதிபதியாகி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி யாகி, பின் தலைமை நீதிபதியாக அமர்ந்துள்ளார்.
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
அவரது தீர்ப்புகள் பலவும், அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் சரியான விளக்கங்களாகவும், சரிநிலை தீர்ப்பாகவும் உள்ளதால், எரிச்சல் அடைந்துள்ள மதச்சார்பு அமைப்புகள் அவருக்கு எதிராக இப்படி சேற்றை வாரி இறைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதியான ஒரு தலைமை நீதிபதி – துணிச்சலுடன் கருத்தை வெளியிடும் அறிவு நாணயம் மிக்க நீதிபதி – அவரைப் பற்றி இப்படி குற்றம் சாட்டுவது, அவரையும், மற்ற நீதிபதிகளையும் மிரட்டி வைப்பதற்கான ஒரு முன்னோட்டம்.
கூறியதில் என்ன முரண்பாடு உள்ளது!
அயோத்தி கோவில் வழக்கில், ‘‘கடவுளைக் கேட்டுத்தான் இத் தீர்ப்பை எழுதினேன்’’ என்று ஓர் உயர்ஜாதித் தலைமை நீதிபதி கூறினாரே, அது சட்டப்படியும், அறநெறிப்படியும் ஏற்கத்தக்கதா? அப்படிக் கூற அவருக்கு உரிமை உள்ளது என்றால், இந்தத் தலைமை நீதிபதி கூறியது எப்படித் தவறாகும்?
‘ஹிந்து மதம் சகிப்புத்தன்மை உள்ள மதம்’ என்று சொல்லுகிறார்கள். அவர் கூறியதில் என்ன முரண்பாடு உள்ளது!
இந்தத் தீர்ப்பு ஒரு சாக்கு அவ்வளவே! மற்றபடி அவரையும், இனி நீதிபதிகளாக வரக்கூடியவர்களையும் அச்சுறுத்தவே இந்தக் காகித அம்புகள் – வம்புகள்!
ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் உயர்நிலையில் இருந்தால் பொறுக்காது, அது கண்களை உறுத்தும் என்பதுதானே மனுதர்மம்!
மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவுதான் விசுவ ஹிந்து பரிஷத். அதன்மூலம் இந்தப் பிரச்சினை தொடங்கப்பட்டுள்ளது.
மதவெறி அமைப்புகளுக்கு எதிராக…
‘ஒரு குலத்துக்கொரு நீதி’ சொல்லும் மனுவின் மைந்தர்களின் விஷமம் நிறைவேற ஒருபோதும் முற்போக்காளர்கள் அனுமதிக்கக் கூடாது; வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும். மதவெறி அமைப்புகளுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
சென்னை தலைவர்,
19.9.2025 திராவிடர் கழகம்