பேரியக்கம் கண்டவரே!
பெரியார்க்கும் பெரியாரே!
ஆரியத்தின் அடிவேரை
அறுத்தெறிந்த கூர்வாளே!
பூர்வஜென்ம விதிப்பயனைப்
பொய்புரட்டுப் பழங்கதையைச்
சூரியத்தீக் கோளமெனச்
சுட்டெரித்த செஞ்சுடரே!
சிக்கனத்தை விதைத்தவரே!
சீர்திருத்தம் படைத்தவரே!
கொக்கரித்த வைதீகக்
கோட்டைகளை உடைத்தவரே!
எக்கணத்தும் வருணத்தை
எதிர்த்தவரே! எவ்விதத்தும்
மக்களுக்குத் தீமைதந்த
மடமைகளைத் தகர்த்தவரே!
அண்டபகி ரண்டத்தை
ஆண்டவனார் லோகத்தை,
கண்துயிலும் கோலத்தைக்
கடவுள்வண்ட வாளத்தைக்
கொண்டுவந்து நேர்நிறுத்திக்
குத்தீட்டிக் கேள்விகளால்
துண்டுபல துண்டாக்கித்
தோலுரித்துப் போட்டவரே!
மூவர்களை, முனிவர்களை,
முப்பத்து முக்கோடித்
தேவர்களை, தேவியரைத்
தெய்வீகப் புருஷர்களை
ஏவிவிட்ட புராணத்தை,
இதிகாசக் குப்பைகளைத்
தீவிறகு மூட்டிவைத்துத்
தெருவில்போட்டு எரித்தவரே!
மூத்திரப்பை பழுதாகி
முதுகுவடம் பாழாகி
நீத்துஉயிரை விடும்நேரம்
நெருங்கிவந்தும் சோராமல்,
சூத்திரனைப் பஞ்சமனைச்
சுடுசொல்லால் அவமதித்த
சாத்திரத்தை இறுதிவரை
சவுக்கால் அடித்தவரே!
“ஓர்குலத்துக் கொருநீதி “
உரைத்ததனால் வரநேர்ந்த
பேரிழப்பைத் தடுத்தவரே!
பெருமுயற்சி எடுத்தவரே!
கேரளத்தில் வைக்கத்தில்
கீழ்ச்சாதி எனப்பட்டோர்
ஊர்நடுவில் நடப்பதற்கும்
உரிமைபெற்றுக் கொடுத்தவரே!
சரஞ்சரமாய் தொடர்கணைகள்!
சனாதனத்தின் விமர்சனங்கள்!
வருஞ்சுமைகள் என்றறிந்தும்
வரலாற்றைப் புதுப்பிக்க
நெருஞ்சிமுள்ளில் நடந்தவரே!
நெருப்பாற்றைக் கடந்தவரே!
கருஞ்சட்டை நாயகரே!
காலத்தின் தூதுவரே!
பத்துத் தலைமுறைக்குப்
பணம், சொத்துச் சுகமிருந்தும்
மெத்தைமலர்ப் பஞ்சணையை
மேல்துண்டு போல்உதறி
சத்தியத்தை நிலைநிறுத்தும்
சமதர்மப் போர்க்களத்தில்
எத்தனைவெஞ் சிறைவரினும்
ஏற்றுக் கிடந்தவரே!
பெண்ணுக்கு முன்னுரிமை!
பேச்சுரிமை! எழுத்துரிமை!
கண்முன் அரங்கேறக்
களங்கள் அமைத்தவரே!
கைம்பெண் மறுமணமும்
காதல் திருமணமும்
பைம்பொன் பரிசுபெறப்
பாதை வகுத்தவரே!
கவிச்சுடர்
கவிதைப்பித்தன்
படுக்கையறைப் பதுமைகளாய்
பயன்பாட்டுக் கருவிகளாய்
அடுக்களையின் அடிமைகளாய்
அடங்கிக் கிடந்தபெண்கள்
தடுப்பணைகள் அனைத்தையுமே
தவிடுபொடி யாக்கிவிட்டு
மிடுக்குநடை போட்டுவர
விடுதலைபெற் றளித்தவரே!
தடியசைய உடலசையத்
தவழ்காற்றில் வெண்தாடி
முடியசைய நாடெங்கும்
முழக்கமிட்ட அரிமாவே!
கொடியசையத் தேர்மீது
கொலுவிருக்கும் வேந்தனைப்போல்
நெடியமக்கள் ஊர்வலத்தில்
நீந்திவந்த பேரழகே!
ஊழ்வினையை நம்பியவர்
உறக்கம் கலைத்தவரே!
வீழாமல் நடக்க, விடி
வெள்ளியாய் முளைத்தவரே!
தாழாமல் எந்தமிழர்
தலைநிமிரக் களப்போரில்
வாழ்நாள் முழுவதையும்
வழங்கிவிட்டுப் போனவரே!
வள்ளுவனார் எழுத்துக்கும்
வள்ளலார் கருத்துக்கும்
கொள்கை உருக்கொடுத்த
கோமானே! குலப்பகைவர்
எள்ளல் இழிவுரையை
எட்டி உதைத்தவரே!
அள்ளிக் கயமைகளை
ஆழப் புதைத்தவரே!
நாயினுக்கும் கீழாக
நமைப்பேதப் படுத்திவிட்டு
வாயடித்து, நம்தமிழர்
வயிற்றிலும் அடித்துவிட்டுப்
பாய்விரித்த “மனுதர்மம்”
பகுத்தறிவுத் தடியெடுத்து
நீயடித்த அடியால்தான்
நிர்மூலம் ஆனதையா!
விஞ்சும்இட ஒதுக்கீடு!
வேல்விழியார் சொத்துரிமை!
அஞ்சாமல் கொண்டுவந்த
“அர்ச்சகர் சட்டம்” வரை
வஞ்சகத்தை வென்று செயல்
வடிவம் கொடுத்து உங்கள்
நெஞ்சில் இருந்தமுள்ளை
நீக்கியவர் “கலைஞர்’’ அன்றோ!
ஆதவன்போல் ஒளிவீசி
அய்யா, நீ போட்டுவைத்த
பாதையிலே இலட்சியப்
பயணம் நடத்திவரும்
மேதகு முதலமைச்சர்! “முத்து
வேல்கருணா நிதிஸ்டாலின்’’
சாதனையின் நல்லாட்சிச்
சரித்திரம் தொடருதையா!
ஆலயத்துக் குள்ளேயே
அனுமதிக்கப் படாதவர்கள்
கோலமிகு அர்ச்சகராய்
கொண்டாடப் படும்அந்தக்
காலம்இதோ வந்தது உங்கள்
கனவுநன வானதையா!
ஞாலம்உங்கள் திருப்பெயரை
நன்றிசொல்லி வணங்கும் அய்யா!
சாயாத இமயமெனச்
சரியாத வானமென
ஆயிரம் பிரளயத்தும்
அழியாத கல்வெட்டாய்
தாயகத்தும் அயலகத்தும்
தந்தையே! உமதுபுகழ்
தூயமக்கள் உள்ளத்தில்
சுடர்வீசித் திகழும் அய்யா!
நன்றி: ‘முரசொலி’ 17.9.2025