பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!

‘‘21 ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டே!’’ என்று சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நமது முதலமைச்சர், தந்தை பெரியார் படத்தைத் திறந்து, ஆற்றிய உரை சரித்திர சிறப்பே!

தந்தை பெரியார்பற்றி உலகளவில் அரிய நூல்களுடன் அணிவகுப்பு!

பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!

தமிழர் தலைவர் ஆசிரியரின்,
தந்தை பெரியார் பிறந்த நாள் அறிக்கை!

ஆசிரியர் அறிக்கை

Contents

 

பெரியார் உலக மயமாகிக் கொண்டிருக்கிறார்; ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தினை நமது முதலமைச்சர் திறக்கிறார்; 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டு என்பதற்கான அடையாளமே சிறுகனூரில் உருவாகும் பெரியார் உலகம். பெரியாரை வாசித்த நிலை மாறி, சுவாசித்து புது வாழ்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவ்கள், தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

147 ஆம் ஆண்டில் பெரியார் தம் பெரும் பயணம் வெற்றிப் பாதையின் வெளிச்சப் பயணமாகி வருகிறது. ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில், உலகமே வியந்து பார்த்து, தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சிந்தனையாளரும், தனது உடல், பொருள், உயிர் அனைத்தையும், 95 வயதில் உடல்நலம் குன்றிய நிலையிலும், தனது தொய்வற்ற தொண்டறத்தை நாளும் வடியும் சிறுநீரை ஒரு குழாய்மூலம் ஒரு பாத்திரத்தில் வைத்து,  சிறு வாளியை ஒரு கையில் ஏந்தி, மறு கையில் தோழர்களைப் பிடித்துக்கொண்டு, இறுதி மூச்சடங்கும்வரை நம் மக்களின் பிறவி இழிவைப் போக்க உறுதி பூண்டு உழைத்த அவரது தொண்டு, நெருப்பாற்றில் அடித்த எதிர்நீச்சல்! அந்த நிலையிலும், வெற்றிக் கரையை அடைந்துள்ள சமூகப் புரட்சியின் வரலாற்றை சில நாள் – சில மணிநேரங்களில் விளக்கி, அறிவாசானின் ரத்தம் சிந்தாப் புரட்சியை, காட்சிப்படுத்த, மானுட உரிமைகளை மாட்சியடைய அவர் செய்த அப்பழுக்கற்ற தொண்டினை விளக்கி எழுப்பப்படும் வரலாற்றுக் களங்களின் தொகுப்பே ‘‘பெரியார் உலகம்’’ என்ற பெயரில் நாம் எடுத்துள்ள பெருமுயற்சி!

ஆசிரியர் அறிக்கை

சமூகப் புரட்சி சாதனையாளரின் சரித்திரம் சிறுகனூர் பெரியார் உலகம்!

சமூகப் புரட்சிச் சாதனையாளரின் சரித்திரத்தை, உலகம் திரண்டு வந்து காணவிருக்கும் இடமே   திருச்சி – சிறுகனூரில் அமையவிருக்கும் ‘‘பெரியார் உலக’’ மாகும்!

‘மானமும், அறிவும் மனி தர்க்கழகு’ என்றவர், அதை எப்படி எதார்த்தமாக்கினார் என்பதைக் காட்சிப்படுத்தும் கட்டுமானம் மட்டு மல்ல, உரிமைகள் உலகில் எங்கு பறிக்கப்பட்டாலும், அதற்காக இந்த சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துத் தந்த மாமருந்துதான ‘சுயமரியாதைச் சூரணத்தைத்’ தயாரிக்கும் களமாகும்.

அறிவாசான் தந்தை பெரியாரின் ஒப்பற்ற மகத்தான மானிடப் பார்வையைப் புகழ்ந்து, 21 ஆம் நூற்றாண்டினை, அவரது நூற்றாண்டாக சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கான அடை யாளம் சிறுகனூரில் அமைந்து வருகின்ற ‘‘பெரியார் உலகம்!’’

‘‘உலகம் பெரியார் மயம் – Globalize Periyar

பெரியார் உலக மயம் – Periyar the Globalize’’

என்பது வெற்று முழக்கமல்ல; கற்றுத் துறைபோகிய அறிவின் திரட்டு! அகிலமும் எப்படி அய்யாவின் மண்டைச் சுரப்பை தொழுகிறது (பின்பற்றுகிறது) என்பதற்கு அண்மையில், நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இங்கி லாந்து நாட்டில், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து, பெருமகிழ்ச்சியுடன் பேசியதே சான்று! திராவிட இயக்க வரலாற்றில் இது ஒரு பெரும் சரித்திர சாதனையாகும்!

ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியாரைப்பற்றிய
அரிய நூல்கள்!

அடுத்ததாக, பிரபல Cambridge University Press வெளியீடாக, தந்தை பெரியார்பற்றிய   ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூலாகப் பேராசிரியர்கள் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி,  முனைவர்  கார்த்திக் ராம் மனோகர் ஆகியோர் தொகுத்துள்ள நூலும், ஆய்வாளர் விக்னேஷ் ராஜாமணி எழுதியுள்ள ‘‘The Dravidian Pathway: How The DMK Redefined Power And Identity In South India’’ என்ற நூலும் வெளியிடப்பட்டதே  ‘‘21 ஆம் நூற்றாண்டு, பெரியார் நூற்றாண்டே’’ என்று நாம் 28 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை நிரூபிக்கும் சாட்சியங்கள் அல்லவா!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றின் பெருமைமிகு சாதனைகள்பற்றி, சேரன்மாதேவி, வைக்கம் போராட்டங்கள் அவ்வியக்கத்தின் முன்னோட்டமாக நின்று, வென்று காட்டியது உள்பட பல சாதனைகளைச் சிறந்த சுயமரியாதை வரலாற்றாசிரியர் பெருமைக்குரிய எஸ்.வி.ராஜதுரை, கீதா போன்றவர்களும் எளிய நடையில் (உரையாடல் முறையில்) பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ‘வித்யாபூஷன் ராவத்’ அவர்களது கேள்வி – பதில் முறையில் புத்தகம் விரிவான வரலாற்றுக் கொள்கை விளக்கமாகும்!

புகழ்மிக்க சென்னைப் பல்கலைக் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து,  கடந்த 11, 12 ஆகிய நாள்களில் நடத்திய, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ஆங்கிலக் கருத்தரங்கத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர்  மானமிகு ஆ.இராசா, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் பிரபல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடந்த கருத்தரங்கு, உலகப் பார்வை யாளர்களை ஈர்த்துப் பெருமை தந்தது.

சுயமரியாதை இயக்க, திராவிட ஆட்சி, பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்பு, சுயமரியாதைத் திருமணம், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான தொடர் முயற்சிகள்பற்றி புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மனோஜ் மிட்டா எழுதிய ‘சாதிப் பெருமை’ (Caste Pride) நூலினைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் பிரபல எழுத்தாளர் விஜயசங்கர். இப்படி பெரியாரின் தொண்டினை விளக்கும் அணிமணிகளாகி,

‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள்

அணிந்திராத அணியாவார்

அறிந்திராத அறிவாவர்’’

என்பதை அகிலம் அறிந்து, போற்றி வருவது, வளர்ந்துகொண்டே வருகிறது.

ஆசிரியர் அறிக்கை

உலகின் பல நாடுகளிலும்
பெரியார்தம் பகுத்தறிவு வெளிச்சம்!

இப்படி 21 ஆம் நூற்றாண்டு, பெரியார் நூற்றாண்டு என்பதற்கொப்ப உலக நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா இப்படி பற்பல நாடுகளில் பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம் பரவி வருவது மற்றொரு சான்றாவணமாகும்.

கொள்கை எதிரிகளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தரந்தாழ்ந்து, கூலிகளை விலை பேசி அழைத்து, வீணாகிறார்கள்!

கொள்கை எதிரிகள் களத்தில் புறந்தள்ளப்பட்டு வருகிறார்கள்; கூலிப் படைகளையும், கருத்தில்லா காலிகளையும் தேடி அலையும் பரிதாப நிலைதான் மிச்சம், அவர்களுக்கு!

எனினும்,வெற்றி ‘பெரியார்’ என்ற பெரும் தத்துவத்திற்கே!

‘பெரியார்’ என்ற மூச்சுக் காற்று – மானுடத்தின் நிரந்தரத் தேவை!

நம் சேவை அத்தகையதுதான்!

சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆயுதங்களோடு  நூற்றாண்டு காணும் சுயமரி யாதை இயக்கமும், அதன் தோற்றுநர் தந்தை பெரியாரும்!

பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

16.9.2025             

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *