அண்ணா திராவிட இயக்கக் கொள்கையாளர்! அவரை வியாபாரப் பொருளாக்க அனுமதியோம்! 2026 ஆம் ஆண்டு தேர்தல்மூலம் சாதித்துக் காட்டுவோம்!

2 Min Read

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, செப்.15 – அண்ணா திராவிட இயக்கக் கொள்கையாளர்! அவரை வியாபாரப் பொருளாக்க அனுமதியோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2025)  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தந்தை பெரியாரின் தலைமகன்!

தந்தை பெரியார் அவர்களுடைய தலைமகன் அறிஞர் அண்ணா. திராவிட அரசியலுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் ஒரு மீட்சியாகவும், நீட்சியாகவும் தனது ஆட்சிமூலம் செயல்படுத்திக் காட்டினார்.

நமக்கெல்லாம் பெரிய ஏமாற்றமாகும்!

அண்ணா அவர்களுடைய ஆட்சி குறுகிய கால ஆட்சியாக நடைபெற்றது என்பது, நமக்கெல்லாம் பெரிய ஏமாற்றமாகும். இயற்கையின் கோணல் புத்தியால் குறுகிய காலத்தில் அண்ணாவை இழந்தோம். ஆனால், அந்தக் குறுகிய காலத்திலேயே அண்ணா அவர்கள் சாதித்த முப்பெரும் சாதனைகள், வரலாற்றில் என்றைக்கும் தனி இடத்தைப் பெற்று, இந்தியாவையே உலுக்கிப் பார்க்க வைத்தவையாகும்.

‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று சொன்னவர் அண்ணா.

அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தது.

தாய் மண்ணுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.

அதேபோல, ஹிந்தி மொழி திணிப்புக்கு இங்கே இடமில்லை என்று நம்முடைய தமிழ்மொழியும், உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழியும் ஆக இரு மொழிக் கொள்கைதான் என்று பிரகடனம் செய்தார்.

‘‘முப்பெரும் சாதனைகளில், எவரும் கை வைக்க முடியாது’’ என்று சொன்ன அண்ணா அவர்கள், ‘‘இந்தக் கொள்கைகள் இருக்கும் வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்’’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.

உலகம் வியக்கத்தக்க வகையில்…

தந்தை பெரியார் கொள்கைகள், அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி இவற்றையெல்லாம் சேர்த்துத் தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக இன்றைக்கு உலகம் வியக்கத்தக்க வகையில், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் தமிழ்நாட்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் மிகப்பெரிய அளவிற்குத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை அண்ணாவின் பிறந்த நாளில் அறிவிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

வேதனையானது, வெட்கப்படக் கூடியது!

அதேநேரத்தில், கொள்கை யாளர்கள், அண்ணாவை கொள்கையாகப் பார்க்கிறார்கள். ஆனால், பதவியாளர்கள் அண் ணாவை வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டு, அரசியலில் பேரம் பேசிக்கொண்டு, அடகு வைக்கும் பொருளாக ஆக்கியிருப்பதுதான் வேதனையானது, வெட்கப்படக் கூடியது.

2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர்களாகிய மக்கள் இதற்கு முடிவு கட்டுவார்கள். அடகு வைக்கப்பட்டுள்ள அண்ணா பெயரில் அமைந்துள்ள ஒரு கட்சியை மீட்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். அதற்கான மீட்சியை திராவிட இயக்கம்தான் செய்யும், நம்முடைய முதலமைச்சர்தான் செய்வார். – இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *