உடல் பருமன் பல்வேறு வியாதிகள் வரக்காரணமாகிறது. உடல் உழைப்பு இல்லாததாலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளாதது, எண்ணெய் உணவுப் பொருட்களை அதிகமாக உண்ணுவதும் உடல் பருமனில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வீட்டில் மிச்சம் உள்ள உணவை வெளியே போட மனமில்லாமல் சாப்பிடுவதும், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனியை சாப்பிடுவதும் இந்தப் பிரச்சினையை உருவாக்குகிறது. உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பகப் புற்று நோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், சுவாசத்தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவி லக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடல் பருமனை தவிர்க்க வழி: உடல் பருமனை தவிர்க்க, குறைந்த கலோரி அளவுள்ள உணவை உட்கொள்ளுதலும், அதிக நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ளுதலும் முக்கியம். காய்கறி சாலட், கீரை வகைகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது. இரவில் அதிகமாகக் உண்ணக் கூடாது.
நாள்தோறும் 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். உணவு வேளையின் போது குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டியைத் தவிர்க்க வேண்டும். பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.பூரி, புரோட்டா, மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும்.
அதிக கலோரிகள் உள்ள இனிப்பு நிறைந்த சர்க்கரை, தேன், அய்ஸ்கிரீம், சாக்லேட், மிட்டாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் செயற்கைப் பானங்களை வாங்கிக் குடிக்கக்கூடாது. பூண்டு, வெந்தயம், லவங்கப்பட்டை, கீரை உணவுகளைத் தினமும் சேர்த்து வந்தால் எடைக் குறையும் வாய்ப்பு உள்ளது.
கம்பு, தினை, சிறுகோளம் எனச்சிறு தானியங்களைச் சேர்க்கலாம். உடற்பயிற்சி மற்றும் யோகா, ஆரோக்கியமான உணவு என நெறிப்படுத்தி வாழ்ந்தால் பருமன் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.