பெரம்பலூர்,மே29 – பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களை ஏற்றி செல்லும் 380 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பளர் சியாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வட்டார போக்கு வரத்து அலுவலர் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு 2012-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகளை உருவாக்கி அதனடிப்படையில் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி வாகனங்களை மாவட்ட ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளிக் குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும் ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும், பயணத்தின் போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும், பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும்.
பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும், முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும், அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும், வாகனத்தில் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்திருக்க வேண்டும்.
ஓட்டுநர்கள் ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள வேண்டும், ஓட்டுநர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றும், கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை ஓட்டுநர்கள் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது எனவே ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர் வோடும் பணியாற்ற வேண்டும். என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கினார்கள்.