ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) பணியாற்றி வருகிறார். இந்த அஞ்சல் நிலையத்துக்கு அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜோதிடரான சண்முகம் (வயது 63) என்பவர் அஞ்சல் தொடர் சேமிப்பு (ஆர்.டி.) கணக்கு வைத்திருக்கிறார்.
எனவே இதுதொடர்பாக பேச அவர் பெண் அதிகாரியின் கைப்பேசி எண்ணை வாங்கி சென்று உள்ளார். பின்னர் அவர் அந்த கைப்பேசி எண்ணில் பெண் அதிகாரியை அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் சண்முகத்தை அந்த பெண் அதிகாரி எச்சரித்தார். எனினும் தொடர்ந்து அவர் அஞ்சல் நிலையத்துக்கு சென்று பெண் அதிகாரியிடம் ஆபாசமாக பேசுவதும், தொடுவதும் என பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகத்தை கைது செய்தனர்.