புதுடில்லி, செப்.12- பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெறு வதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் ஆவணங்கள் இல்லாத நிலையில் லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆலோசனை
பீகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது.
அதற்கான தயார்நிலை குறித்து ஆலோசிப்பதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. தேர்தல் ஆணையராக சிறப்பு தீவிர திருத்தப்பணி கொள்கை குறித்து தேர்தல் ஆணையம் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பீகார் தலைமை தேர்தல் அதிகாரி, பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் அனுபவத்தை எடுத்துரை த்தார். தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்ற பிறகு, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நடத்தப்படும் 3-வது கூட்டம் இது வாகும். சிறப்பு திருத்தப்பணி பற்றிய ஆலோசனை கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
திருத்தப்பணி தொடக்கம்
அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால், இந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கும் என்று தெரிகிறது. சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்ட வர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் இதன் முக்கிய நோக்கம். அதற்காகத்தான் சில மாநிலங்களில் வங்காளதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாசன கடமையை நிறை வேற்ற திருத்தப்பணி மேற் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சரிபார்ப்புப் பணி
அதன் ஒரு அங்கமாக பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள். பா.ஜனதாவுக்கு உதவும் வகையில் வாக்காளர் தரவுகளில் தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எனவே, சட்டவிரோதமாக குடி யேறியவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதற் காக தேர்தல் ஆணையம் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாக்காளராக சேரவும். வெளிமாநிலங்களில் இருந்து தங்களது வாக்காளர் பதிவை அங்கு மாற்றவும் விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக பிரகடன படிவம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இணையத்தில் வெளியீடு
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்குவதையொட்டி, சில மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தங்கள் மாநிலங்களில் கடைசியாக நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப்ப ணிக்கு பிந்தைய வாக் காளர் பட்டியலை இணை யதளத்தில் வெளியிட தொடங்கி விட்டனர்.