டில்லி, செப்.12 2024 மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் இந்த ஆண்டு 65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்நிய கடன் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாள் ஒன்றிய அரசு, 2024 மார்ச் 31இல் இருந்ததை விட நாட்டின் அந்நிய கடன் ஓராண்டில் 10.1% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன், 2025இல் ரூ.64.87 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதில் அரசு வாங்கியுள்ள கடனை விட, நிறுவனங்களே அதிக கடன் வாங்கியுள்ளன. 2024 மார்ச்சில் ரூ.40.82 லட்சம் கோடியாக இருந்த நிறுவனங்கள் கடன், 2025இல் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதித்துறை சாராத தனியார் நிறுவனங்களின் அந்நிய கடன் மட்டுமே ரூ.23,05,709 கோடி என அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அந்நிய கடன் 2024-2025இன் ஒரே ஆண்டில் 13.3% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. 2024 மார்ச்சில் ரூ.13.10 லட்சம் கோடியாக இருந்த அரசின் அந்நிய கடன் ரூ.14.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம்
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, செப்.12 மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா நேற்று (10.9.2025) செய்தியாளர்கள் சந்திப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் பேசும்போது, “நாங்கள் எங்கள் தாய்மொழியான வங்காள மொழியைப் பேசுவோம் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். மற்ற மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்:
lபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதி உதவி: மேற்கு வங்காளத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும். மேலும், அவர்களின் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
lநேபாளத்தில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள்: நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பிரச்சினை தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். “நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து வருவோம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த அறிவிப்புகள், புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் மற்றும் அவசர சூழ்நிலையில் சிக்கி யுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நம்பிக்கையை அளிப்பதாகக் கருதப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி
சென்னை, செப்.12- ஒன்றிய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.அய். எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டில்லியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10, 11-ஆம் தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இன்னும் ஒரிரு மாதங்களில் இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.