சென்னை, மே 30 – பட்டதாரி ஆசிரியர்களை உபரி ஆசிரியர்களாக்கிய அறிவிப்பு நடைமுறைக்கு வராது என உயர்நீதிமன்றக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஏஞ்சலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளி கல்வி இணை இயக்குநரால் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பட்டதாரி ஆசிரியராக (அறிவியல்) 23.9.1998ல் நியமிக்கப்பட்டேன். கடந்த 20.12.2016 முதல் காரைக்குடி மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன். நான் உபரி ஆசிரியராக உள்ளதாக எனது பெயர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய விளக்கம் அளித்து, எனது பணியினை இந்த பள்ளியிலேயே தொடர அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினேன்.
ஆனால் என்னை இடமாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்குமாறு வற்புறுத்துகின்றனர். எனவே, என்னை இதே பள்ளியில் தொடர அனுமதிக்குமாறும், என் பெயரை உபரி ஆசிரியர் பட்டியலில் சேர்த்த உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதேபோல் டெய்சி மார்க்ரெட் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு கூடுதல் பிளீடர் சதீஷ்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் கோரிக்கையை ஆய்வு செய்தபோது, மனுதாரர்களே பணியில் மூத்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், உபரி ஆசிரியராக கருதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நடைமுறைக்கு வராது’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.