சென்னை, செப்.11- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினீத் விசாரணைக்கு உத்தரவிட்டார். அவரது தலைமையில் குழுவினர் பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 2 தனியார் மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகார குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. வடமாவட்டங்கள் அடங்கிய குழுவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை – சென்னை மருத் துவக் கல்லூரி டீன் தலைமையில் 6 உறுப்பினர்கள், மத்திய மாவட்டங்கள் குழுவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் 6 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கு மாவட்டங்கள் குழுவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் 6 உறுப்பினர்கள், தென்மாவட்டங்கள் குழுவில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் 6 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக, புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். 6 பேர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.