சென்னை செப்.10- விவசாய மின் இணைப்புக் கோரி காத்திருந்தவா்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1989-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து, 2003-ஆம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில், தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்புகளுக்காகக் காத்திருந்த நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் மீதமுள்ள விவசாய மின் இணைப்புகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது,
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில், மின்வாரியம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இருப்பில் இருக்கும் மின் உபகரணங்கள் குறித்தும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருந்தவா்களுக்கு ஏற்கெனவே 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில், நிகழாண்டுக்கான 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி விரைந்து தொடங்கப்படும் என்றனா்..
சுற்றுச்சூழல் பசுமைத்திட்டத்தில்
மரக்கன்றுகள் நடப்பட்டன
சென்னை, செப்.10- மேடவாக்கத்திற்கு அருகிலுள்ள ஒட்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள, உடனடியாகக் குடியேறத் தயாராக உள்ள பிரீமியம் வீட்டு மனைகளின் தொகுப்பான வி.ஜி.என். ஹெரிடேஜ் ஸ்பிரிங்ஸ் ‘இனி ஒரு நிழல் செய்வோம்’ என்ற பசுமைத் திட்டத்தைத் தொடங்கியது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, திட்டப் பகுதியின் 4.85 ஏக்கர் பரப்பளவில் 800க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் எல்.சிறீ.தேவி மற்றும் ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா வீரபாபு இருவரும் இணைந்து, இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். சுற்றுச்சூழல் நன்மைகள், நிழல் மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் மர இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடப்பட்டன. சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஸ். டிரஸ்ட் நீண்டகால முயற்சியாக உடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்திட்டம், ஒரு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய வி.ஜி.என். குழுமத்தின் இயக்குநர் பத்மா தேவதாஸ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனுஷா அஷ்யந்த் ஆகியோர், இத்திட்டம் வெறும் வீட்டு மனைகளை ஊக்குவிப்பிற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்தனர்.