திருச்சி, செப்.10- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி த்துறை மற்றும் இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் (SGFI) இணைந்து நடத்திய மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07.09.2025 அன்று நடைபெற்றது.
இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா மிகச் சிறப்பாக விளையாடி, மாநில அளவில் தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவியின் இச்சாதனைக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் டேக்வாண்டோ சாதனை
திருச்சி, செப்.10-திருச்சி மாவட்ட டேக்வாண்டோ பயிற்சிக் குழுமம் மற்றும் அருணா விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மய்யம் ஆகிய அமைப்புகள் இணைந்து, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளைக் கடந்த 06.09.2025 மற்றும் 07.09.2025 ஆகிய இரண்டு நாட்கள், திருச்சி புத்தூரில் நடத்தின.
இந்தப் போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் அளப்பரிய சாதனைகள் படைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மூன்றாம் வகுப்பு மாணவன் பி.ஆரிஸ் அக்ரம், ஆறாம் வகுப்பு மாணவி சி.ஆதன்யா, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கே.சிறீ ஹரி ராம், மற்றும் எஸ். அமல், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஹரிணி ஆகியோர் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், நான்காம் வகுப்பு மாணவன் கே.சி. வர்ஷித் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.