திருச்சி, செப்.10: திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கும் விழா 04.09.2025 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா செந்தாமரை வரவேற்புரையாற்றினார். திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை உதவி பேராசிரியர் மருத்துவர் சிந்தியா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் தம்முடைய நன்றியினை முதலில் தெரிவித்துக் கொண்டார்.
நமக்கு உரிமைகள்
மேலும் தந்தை பெரியார் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு நமக்கு உரிமைகள் கிடையாது. அதிலும் குறிப்பாக பெண்கள் படித்திருக்க முடியாது. தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் தலைவராக இருந்த போதிலும் அவர்கள் வாழ்வில் பின்பற்றிய எளிமையும் சிக்கனமும் இன்றும் நமக்கு பாடமாக இருக்கின்றது. தொலைதூரத்தில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசக்கூடிய சாதனம் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் இருக்கும் என்று அய்யா அவர்கள் இனிவரும் உலகம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டது அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் உச்சம் என்றும் உரையாற்றினார்.
உலக அறிவை தெரிந்து கொள்ள….
இன்றைக்கு மாணவர்கள் புத்தகம் படிப்பதையே மிகவும் சுமையாக கருதுகின்றனர். ஆனால் தாம் வாழ்ந்த 94 ஆண்டு வரை புத்தகம் படிப்பதையும் உலக அறிவை தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் அவரால் புதுமைகளையும் புரட்சிகளையும் செய்ய முடிந்தது.சிறியவர்களிடத்தும் மரியாதையுடன் பேசக்கூடியவர்கள் தந்தை பெரியார் அவர்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள் பெற்றோர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் மரியாதை காட்டுவது கிடையாது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மாணவர்களை வழிநடத்தக் கூடியவர்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். அதனால் அவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்றும் தம்மை விட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் ஆசிரியர்கள் மட்டும்தான். அதனால் நாம் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றாலும் நமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை ஒரு நாளும் மறக்கக்கூடாது என்றும் உரையாற்றினார்.
நல்ல
புத்தகங்களை….
புத்தகங்களை….
மாணவர்கள் நல்ல புத்தகங்களை நாள்தோறும் படிக்க வேண்டும். அதேபோல் நல்ல சத்தான சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளம் தலைமுறைகளிடத்தில் உணவு பழக்கம் மிகவும் மோசமாக இருக்கின்றது. துரித உணவுகளை எடுத்துக் கொள்வதால் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன், பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதனால் நல்ல உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் படிப்புடன் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் பங்கேற்க வேண்டும் என்றும் கூறி, “மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்” என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டி மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். கலைப் போட்டிகளின் செயலாளர் முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி விளையாட்டுப் போட்டிகளின் செயலர் பேராசிரியர் கு.சக்திவேல் மற்றும் மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்பனர் துறைத் தலைவர் பேராசிரியர் க உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரையாற்றினார். கலை போட்டியின் ஒட்டுமொத்த வாகையர் (சாம்பியன்) பட்டத்தை நான்காம் ஆண்டு இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு மாணவர்களும் விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த வாகையர் (சாம்பியன்)பட்டத்தை மூன்றாம் ஆண்டு இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு மாணவர்களும் வென்றனர் என்பது குறிப்பிடத்
தக்கது.