திருச்சி, செப்.10: திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மனக்கணக்குத் திறனை ஊக்குவிக்கும் வகையில் “அபாகஸ் உலக சாதனை – 2025” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் இருந்து 4 முதல் 15 வயது வரை உள்ள 355 மாணவர்கள் பங்கேற்றனர். அனைவரும் கண்களை கட்டிக்கொண்டு 650 அபாகஸ் கணக்குகளை 60 நிமிடங்களில் தீர்த்து, உலக சாதனை படைத்தனர். நேரடி மற்றும் ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிறுவர்களின் மனவலிமை, கவனம், வேகம் மற்றும் துல்லியத்தைக் காட்டும் அரிய வாய்ப்பாக அமைந்தது. மாணவர்களின் இந்த அசாதாரண முயற்சியை அங்கீகரித்து, சர்வதேச, ஆர்.பி. உலக சாதனை புத்தகம் சான்றிதழ் வழங்கி பாராட்டியது. மேலும், இந்த நிகழ்ச்சி ஐ.எஸ்.ஓ.9001:2015 உலகத் தரச் சான்றிதழும் பெற்றுள்ளது.
இந்த சாதனை நிகழ்வில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் என்.ஹர்ஷன் பங்கேற்று உலக சாதனை படைத்ததற்கானச் சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
இந்த சாதனை, மாணவர்களின் கல்வி ஆர்வத்தையும், மனவலிமையையும் உலக அளவில் வெளிப்படுத்தும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவரும் மாணவர் என்.ஹர்ஷனைப் பாராட்டி, எதிர்கால வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.