புதுடில்லி, செப்.9 அரசியல் போட்டிக் கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பாஜக வுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் “400 இடங்களை வெல்வோம்; அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்” என பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது.
பாஜகவின் இந்த பிரச்சாரத்திற்குக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பாஜக 400 இடங்களை வென்றால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி, ஓபிசி இடஒதுக்கீடுகளை அடியோடு ஒழிக்கும்” என கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு எதிராக தெலங்கானா பாஜக மாநில பொதுச் செயலாளர் கரம் வெங்க டேஷ்வரலு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இதனை எதிர்த்து ரேவந்த் ரெட்டி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அண்மையில் இந்த வழக்கை விசாரித்த தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே. லட்சுமணன், “அவதூறு கருத்துகள் பாஜக கட்சிக்கு எதிராக தெரிவிக்கப்பட்டன. ஆனால், வெங்கடேஷ்வரலு தனிப்பட்ட முறையில் புகார் தாக்கல் செய்துள்ளார். இது முரண்பாடானது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.
தொடர்ந்து தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வெங்கடேஷ்வரலு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மேல் முறையீட்டு மனு நேற்று (8.9.2025) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள்
கே. வினோத் சந்திரன் மற்றும் அதுல்
எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதத்தை தொடங்கும் முன்பு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் தயா ராக இல்லை” எனக் கூறினார். ஆனால், வழக்குரைஞர் ரஞ்சித் குமார், “வாதத்தைக் கேளுங்கள்” என வலியு றுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் அதி ருப்தியை வெளிப்படுத்தி, “அரசியல் போட்டிக்கான தளமாக நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது. இதனை பல முறை தெரிவித்தும் தொடர்ச்சியாக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டு மானால், எதையும் தாங்கும் தன்மை வேண்டும்” என்று தெரிவித்த தலைமை நீதிபதி பி. ஆர்.கவாய் இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.