புதுடில்லி, செப்.9 அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமன் கோவில் கட்டப்பட்டுவிட்டது; ஆர்.எஸ்.எஸின் அடுத்த குறி, மதுரா, காசியில் உள்ள மசூதிகள்மீது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இலைமறை காயாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். நேரிடையாகத் தலையிடாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதில் பங்கு கொண்டால் அவர்களைத் தடுக்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பைசாபாத் நகரில் இருந்த பாபர் மசூதி தலத்தை இடித்து, அந்த இடம், இராமன் பிறந்த இடம் எனக் கூறி, ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், இதர சங் பரிவார அமைப்புகளும் செய்தன என்பது உலகளவில் அறியப்பட்ட செய்தி.
பாபர் மசூதி தலத்தை இடித்துவிட்டு, உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், மதச் சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட நமது நாட்டில், பிரதமர் அவர்களே, சங் பரிவாரத் தலை வர்களுடன் அடிக்கல் நாட்டி, இராமன் கோவிலும் கட்டப்பட்டு, அந்தத் திறப்பு விழாவிலும் பிரதமர் உள்பட ஒன்றிய அரசின் பொறுப்பாளர்கள், உத்தரப்பிரதேச மாநில அரசின் முதலமைச்சர் மற்றும் அதி காரிகள் கலந்துகொண்டனர்.
அடுத்தகட்ட கலவரத்தினை
உருவாக்கும் முயற்சி!
இராமன் கோவில் கட்டும்பொழுது, மதுரா நகரில் உள்ள கிருஷ்ணன் கோவில் கட்டுவதும், வாரணாசியில் ஞானவாபி மசூதியை – முஸ்லிம் மதத்தினர் வழிபாடு நடத்திவரும் நிலையில், அது சிவ வழிபாட்டுத் தலம் எனக் கூறி, அடுத்தகட்ட கலவரத்தினை உருவாக்கும் வகையில் வந்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று டில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுகையில்,
‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, மதுரா அல்லது வாரணாசியில் கோவில் தொடர்புடைய பிரச்சினையில் கலந்துகொள்ளாது’’ எனக் கூறியுள்ளார். அதேசமயம், இந்தக் கருத்திற்கு நேர் எதிர்மாறாக அந்தப் பேச்சில் குறிப்பிடுகிறார்,
‘‘இராமர் கோவில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரமாக பங்கேற்றது. இராமர் கோவில் கட்டிய சாதனையில் பெருமையும் கொண்டது. ஆனால், கோவில் குறித்து அந்த இயக்கத்தில் வரும் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்காது. ஆனால், கோவில் குறித்த ஹிந்து சமூகத்தின் உணர்வுகளுக்குப் பெரும் மதிப்பளிப்போம்.
காசி, மதுரா, அயோத்தி ஆகிய இடங்கள், கடவுள் அவ தரித்த இடங்கள் என்ற வகையில், முக்கியத்துவம் பெறுகின்றன. ஹிந்து சமூகம் அந்த முக்கியத்துவம் குறித்து தங்களது பக்தி உணர்வுகளை வெளிப்படுத்திடுவது இயல்பானதே. அப்படிப்பட்ட கோவில் சம்பந்தப்பட்ட இயக்கங்க ளில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் பங்கேற்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடுக்காது’’ என்று கூறியுள்ளார்.
என்னே, இரட்டை நிலைப்பாடு!
ஒரு நிலையில், காசி, மதுரா கோவில் விவ காரங்களில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்காது.
மற்றொரு நிலையில், கோவில் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்பதை அமைப்பு தடுக்காது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘இரட்டை நிலைப்பாடு!’
‘‘வரும்; ஆனால், வராது’’ என்னும் திரைப்பட நகைச்சுவைக் காட்சிதான் நினைவிற்கு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இத்தகைய ‘இரட்டை நிலைப்பாடு’ குறித்து ‘ஆரிய மாயை’யில் அறிஞர் அண்ணா சொன்னது, ‘‘பேச நா இரண்டுடையாய் போற்றி!’’
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் செயல்பாடும் மக்களிடம் தோலுரித்துக் காட்டப்படவேண்டும்.