மும்பை, செப்.8- மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 9 பக்தர்கள் பலி யானார்கள். காணாமல் போன 12 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
புனேயில் 2 பேர் பலி
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அண்மையில் ஆனந்த சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வழக்கத்தை விட தண்ணீர் அளவு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் விநாயகர் சிலை கரைப்பின்போது, புனே மாவட்டம் வாகி குருட் பகுதியில் பாமா நதியில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். செல் பிம்பல்காவ் பகுதியில் மற்றொருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். புனே, பிர்வாடி பகுதியில் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
நாந்தெட், ஜல்காவ்
இதேபோல நாந்தெட் மாவட்டம் காடேகாவ் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கசென்ற 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. நாசிக்கில் 4 பேர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கினர். இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஜல்காவில் வெவ்வேறு நிகழ்வுகளில் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
தானேயில் விநாயகர் சிலை கரைப்பின்போது 3 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இதே போல அமராவதியிலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
6.9.2025 அன்று மட்டும் மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது 22 பேர் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதில் 9 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன 12 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
மின்சாரம் தாக்கி….
இதேபோல நேற்று (7.8.2025) காலை மும்பை சாக்கி நாக்கா கைராணிரோட்டில் விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மின்வயர் மீது விநாயகர் சிலை உரசியது. இதில் சிலை அருகே நின்று இருந்த 6 பக்தர்களை மின்சாரம் தாக்கியது. இதில் சுகுமாறன் குமரன் (வயது 35) என்ற பக்தர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரி ழந்தார். காயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.