தலைக்கு மேல் கத்தி!

4 Min Read

ஒன்றிய பிஜேபி அரசு – தொடர்ந்து தங்களின் தாய்  அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கல்வி மூலம் மாணவர்கள் மத்தியில் புகுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைப் புறந்தள்ளி, ‘எல்லாம் எங்கள் கையில்’ என்ற சாட்டையை எடுத்துச் சுழற்றி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை தேசிய அளவில் புகுத்தியது. இதனை எதிர்ப்பதில் திராவிட மண்ணில் திராவிட மாடல் ஆட்சி முன் வரிசையில் நின்றது. அந்தத் திட்டத்தைப் புறந்தள்ளியது.

இந்தியா என்பது பல  மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களை உள்ளடாக்கிய துணைக் கண்டம் ஆகும். இந்த நிலையில் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் என்பது சாத்தியமானதல்ல.

ஆனால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை கொண்ட அரசு ஒன்றிய ஆட்சியில் இருக்கும் காரணத்தால் தங்களின் இந்துத்துவா கொள்கையை ஊன்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தேசிய கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தக் கல்விக் ெகாள்கையை உருவாக்கியவர்கள் கல்வியாளர்கள் அல்லர் என்பதுதான். எல்லாம் தானடித்த மூப்பாக நடக்கும் இறுமாப்பு நடப்புதானே சங்பரிவார்களுடையது.

ஒரு நூற்றாண்டு காலம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணைப் பகுத்தறிவு நெறியில் பக்குவப்படுத்தி வைத்துள்ளதால், எதையும் நுண்மான் நுழைவு புலத்தோடு  தொடக்க நிலையிலேயே துல்லியமாக அறிந்து, எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும், ஆதரிக்க வேண்டியவற்றை எவ்விதமான ஒதுக்கீடுமின்றி ஆதரிக்கும் தன்மை கொண்டதாகும்.

இவர்கள் செயலாற்றி வரும் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் என்பது முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் மூன்றாவது மொழிக்கு இடம் கிடையாது; இருமொழிதான் தமிழ்நாட்டின் கொள்கை என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே சட்டமன்றத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டு விட்டதே!

இந்த நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியைத் திணிக்கும் நோக்கத்தில் இந்தத் தேசிய கல்விக் கொள்கை என்ற நஞ்சை கொண்டு வர முனைப்புக்காட்டி, அதில் தோல்வியைக் கண்டது ஒன்றிய அரசு. (அதைக் காரணம்  காட்டி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.2291.30 கோடியை நிறுத்தியது என்றாலும் திராவிட மாடல் அரசு தன் கொள்கையில் உறுதியாக நின்றது)

தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து ‘விஸ்வ கர்ம யோஜனா’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பிஜேபி அரசு. இத்திட்டத்தின்படி +2 தேர்வில் தோல்வி கண்ட மாணவன் அவனின் குலத் தொழிலைச் செய்ய ஊக்கம் தருவதுதான் அந்தத் திட்டம். 18 வகையான குலத் தொழில்கள்! (முடி திருத்தும் தொழில் சலவைத் தொழில், தையல் தொழில், நகைத் தொழில் உள்ளிட்ட 18 குலத் தொழில்கள்).

1952இல் சென்னை மாநில முதலமைச்சராக வந்த ராஜகோபாலச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் – தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு திரண்டு நின்று எதிர்த்த காரணத்தால், பதவியை விட்டே விலகி ஓடும்படிச் செய்தது நினைவில் இருக்கட்டும்!

அதே போல ‘விஸ்வ கர்ம யோஜனா’ என்ற திட்டம் வந்தத் தருணத்திலேயே அதனை இனங் கண்டு போர்க் கொடி தூக்கியது திராவிடர் கழகமே!

வந்த அடிச்சுவடி தெரியாமல் அத்திட்டம் விரட்டியடிக்கப்பட்டது.

இப்பொழுது எல்.ஓ.சி.எஃப் என்ற பெயரால் (LEARNING OUTCOMES-BASED CURRICULUM FRAMEWORK) என்ற ஒரு திட்டத்தை பல்கலைக் கழக மான்யக் குழு அறிவித்துள்ளது.

இது குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட திட்டமாகும். மாணவர்களை முன்னிறுத்தி பாட திட்டங்களை வடிவமைக்கும் ஒரு குறியீட்டுச் சட்டகம் என்று கூறிக் கொள்கிறது.

ஆசிரியர் போதிப்பதைவிட மாணவர் கற்றலில் முக்கிய கவனம் செலுத்துதல் இதன் நோக்கம் என்று தேன் தடவி நுழைக்கப் பார்க்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக காமர்ஸ் பாடத் திட்டத்தில் அர்த்த சாஸ்திரம், ராமராஜ்யம் உள்ளிட்ட புராதன இந்திய பார்வை இடம் பெறுமாம்.

கணிதத்தில் பீஜ கணிதமுறையாம்! குவாண்டம் விதிகள் என்று வரும்போது இயற்பியலில் சிறிய அளவில் (Atoms, Eelctrons, Photons) போன்ற நுண்ணிய துகள்கள்) நடக்கும் இயற்கையின் அடிப்படைச் சட்டங்களைக் குறிக்கும். இவை பாரம்பரிய நியூட்டன் விதிகள் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டவையாம்!

எப்படி இருக்கிறது? நியூட்டன் உலகம் போற்றும் விஞ்ஞானி. இயற்பியலுக்கு அடித்தளம் அமைத்தவர்.

அவர் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் சாதனங்களுக்கும் அடிப்படையானவை! அதற்கு விரோதமான ஒன்றைக் கற்பிப்பதற்குத்தான் எல்ஓசி என்ற பெயரில் ஒரு கல்வி திட்டமா?

தந்திரமாக நுழைக்கப்படும் இந்தத் திட்டம் இன்னும் பொது வெளியின் வெளிச்சத்துக்கு வரவில்லை.

ஆனால் எதையும் நுணுக்கமாக தொடக்க நிலையிலேயே அறிந்த கொள்ள ஈரோட்டுக் கண்ணாடி தேவை. அதன் அடையாளம்தான் இன்று (8.9.2025) திராவிட  மாணவர் கழகம் பல முக்கிய ஊர்களில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டமாகும்.

மாணவர்கள் மத்தியில் இதனைக் கொண்டு சேர்ப்பதற்கு அடுத்த கட்ட முயற்சிகளைத் தொய்வில்லாமல் கொண்டு செல்வோம்!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *